Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

அக்னீஸ்வரர் திருக்கோயில் - திருக்காட்டுப்பள்ளி

 வழக்குகளில் வெற்றிபெற அக்னீஸ்வரர் கோவில், மேலைத்திருக்காட்டுப்பள்ளி-  Dinamani

மூலவர் : அக்கினீசுவரர், தீயாடியப்பர்
அம்மன்/தாயார் : சௌந்தரநாயகி, அழகம்மை
தல விருட்சம் : வன்னி, வில்வம், ஊமத்தை, கொன்றை
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், காவிரி, குடமுருட்டி நதி,அக்னி தீர்த்தம் -கிணறு வடிவில் உள்ளது.
வழிபட்டோர் : திருமால், பிரமன், சூரியன், பகீரதன், உறையூர் அரசி, அக்கினி, இந்திரன்
தேவாரப் பாடல்கள் :- திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 9வது தலம்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 72 வது தேவாரத்தலம் ஆகும்.

இங்கு மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன.

அக்கினி வழிபட்ட தலமாதலின் கோயிலுக்கு அக்னீஸ்வரம் என்பது பெயர். அக்னி தீர்த்தம் இன்று கிணறு வடிவில் உள்ளது.

இத்தலத்திலுள்ள யோக தட்சிணாமூர்த்தி விசேஷமானவர்.

இத்தலம் மேலைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும், காவிரி தென்கரை தலங்களில் ஒன்று. இங்குத்தான் குடமுருட்டியாறு பிரிகின்றது.திருக்காட்டுப்பள்ளி என்னும் பெயருடைய இரு தலங்கள் உள்ளன. காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும். அது திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது.

தல வரலாறு:

அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும் அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான். இறைவன் அக்னிதேவன் முன் தோன்றி இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும் அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார்.

சனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் தவறுகளுக்கு தகுந்தபடி தண்டனை தருவார். ஒருவர் பிறந்த நேரத்தின்படி சனிபகவான் நன்மை செய்வதாக அமைந்திருந்தால் அவர்களுக்கு நன்மைகளையும், சிறந்த முன்னேற்றத்தையும் அளிப்பார். ஆனால் அனைவரும் சனிபகவான்  செய்யும் நன்மைகளை கண்டு சந்தோஷப்படாமல், அவர் செய்யும் தீய பலன்களைப் பற்றி  மட்டுமே நினைத்து பயந்தனர். இதனால் வருந்திய சனி, வசிஷ்டரின் யோசனைப்படி அக்னி வனம் எனப்படும் இத்தலத்தில் வந்து கடும் தவம் செய்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், அக்னி உருவில் தரிசனம் தந்து, சனியை பொங்கு சனியாக மாற்றினார். அத்துடன் இத்தலம் வந்து தன்னையும் பொங்கு சனியையும் வழிபடுவோருக்கு சனி சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும் என அருள்புரிந்தார். சிவன் அருளின்படி சனிபகவான் இத்தலத்தில் குபேர மூலையில் இருந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வை தருகிறார்.

கோவில் அமைப்பு:

இக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் காலத்துத் திருப்பணியைப் பெற்றது. ஐந்து நிலைகளுடன் கூடிப் பொலிவுடன் ராஜகோபுரம் உள்ளது. செப்புக் கவசமிட்ட கொடிமரம் உள்ளது. பள்ளி என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருந்ததற்கான சான்று என்று கருதுகின்றனர். அதற்கேற்ப 24-ஆவது தீர்த்தங்கரரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளது.

இத்தலத்தில் சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் காலத்து கல்வெட்டுக்கள் உள்ளன.
 இவ்விரு கல்வெட்டுக்களில்  அம்மன் பெயர் அழகமர்மங்கை எனக் குறிக்கப்பிடப்பட்டுள்ளது.   இத்தலத்தில் கும்பாபிஷேகம் 1983 ம் ஆண்டில் நடைபெற்றுள்ளது.

மூலவர்
 நான்கு படிகள் பூமியில் தாழ உள்ளார். படிகள் இறங்கி சுற்றி வலம் வரலாம்.மூலவரைச் சுற்றி வரும் பிரகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தெட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். இத்தலத்திலுள்ள யோக தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி ருத்திராஷம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து யோக மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரை 5 நெய்தீபம் ஏற்றி மூல்லைப் பூவால் வழிபட்டால் திருமணம், கல்வி, செல்வம் யோகத்தை அடையலாம். வலமாகச் சென்றால் விநாயகர் சன்னதி உள்ளது.

வலப்பால் அம்பாள் சன்னதி உள்ளது - தெற்கு நோக்கியது - நின்ற திருக்கோலம். தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். சன்னதி வாயிலில்
 துவாரபாலகிகள் உள்ளனர். உள் பிரகாரத்தில் விநாயகர் உள்ளார். இலிங்கோற்பவர், கோஷ்ட மூர்த்தமாக இருக்காமல், விநாயகருக்குப் பக்கத்தில் சன்னதியாக உள்ளார். இலிங்கோற்பவரிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். அடுத்து வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் உள்ளார். பக்கத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சன்னதிகள் உள்ளன.முன் மண்டபத்தில் வலப்பால் பைரவர், நால்வர் திருமேனிகள் உள்ளன.

கலப்பை ஏந்திய சனி இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார். இவரை சனிக்கிழமைகளில் மட்டுமின்றி அனைத்து கிழமைகளிலும் வன்னி இலைகளால் அர்ச்சனை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். நாம் செய்யக்கூடிய பாவங்கள் அனைத்தையும் இத்தல இறைவன் அழித்து விடுவதால், பாவங்களுக்கு தண்டனை அழிக்கும் வேலை, இத்தலத்து நவகிரகங்களுக்கு கிடையாது. நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன. அனைத்து நவகிரகங்களும் "ப' வடிவில் அமைந்துள்ளன.

இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது.
 பிரம்மாவிற்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் ஆகும்.  பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி  மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.  சிவன் அவருக்கு தனியிடம் தந்து  தங்க  அனுமதித்தார் என்று இத்தலத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. இத்தலத்தில் விஷ்ணு ஸ்ரீனிவாச பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்திலுள்ள இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். குரு தட்சிணாமூர்த்தியின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே மற்றொரு தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம்.

சிறப்புக்கள் :

திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், செல்வச்செழிப்புடன் திகழவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

திருவிழா:

மாசி மகம், பங்குனி பெருவிழா, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை

போன்:  -

குருக்கள் 9442347433

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு திருவையாறு - கல்லணை சாலையில் திருவையாற்றுக்கு மேற்கே 15 கி.மீ.தொலைவில் குடமுருட்டியாற்றின் தென்கரையில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி கோவில் உள்ளது.

இங்கு மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.  நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன. இத்தலம் மேலைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும்.இத்தலத்திலுள்ள யோக தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். இத்தலம் வந்து பொங்கு சனியை வழிபடுவோருக்கு சனி சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும்.
பாவங்களுக்கு தண்டனை அழிக்கும் வேலை, இத்தலத்து நவகிரகங்களுக்கு கிடையாது. நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன. அனைத்து நவகிரகங்களும் "ப' வடிவில் அமைந்துள்ளன.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக