தமிழகத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி
பெற்ற திமுக அட்சிப்பொறுப்பேற்றது. கொரோனா தொற்று பரவல் உச்சத்தில்
இருந்தபோது ஆட்சியமைத்த திமுக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இடைவிடாது
தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமை மற்றும் வழிகாட்டுதல்களின் கீழ், பலதுறைகளை சார்ந்த அமைச்சர்களும் பல முன்னேற்றப்பணிகள் மற்றும் சீர்திருத்தப்பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அடுத்த மாதம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் மக்களின் சுமையை அதிகரிக்காத வண்ண இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
அதே சமயம், அரசுக்கும் கொரோனா தொற்றால் நிதி தட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில், அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்வது அரசுக்கும் சவாலான விஷயமாகத்தான் இருக்கும்.
தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் (Lockdown) 27 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து துவங்கியது. பேருந்து போக்குவரத்து துவங்கிய முதல் நாளான 28 ஆம் தேதியன்று மட்டும் சுமார் 22 லட்சம் பேர் தமிழகத்தில் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். கட்டம் கட்டமாக, பயணிகளின் வருகைக்கேற்ப, ஊரடங்கு தளர்வுகளை பின்பற்றி படிப்படியாக பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழக போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இந்த துறை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இன்னும் சுமையை சேர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், பேருந்து டிக்கெட் கட்டணத்தை அரசு உயர்த்தக்கூடும் என்ற அச்சம் மக்களிடம் இருந்தது. எனினும், பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
முன்னதாக, பல இடங்களுக்கான பேருந்து இயக்கம் கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த இடங்களுக்கான பேருந்து வசதி மீண்டும் துவக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
எற்கனவே சாதாரண பேருந்துகளில் (TN Buses) பெண்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படும் என திமுக அரசு கூறியுள்ளது. புதிய வண்ணத்தில் அந்த இலவச டிக்கெட்டுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்துண்டு இருக்கின்றன.
மேலும், பேருந்துகளின் தோற்றத்தை மாற்றும் பல யோசனைகளும் அரசுக்கு உள்ளன. அனைத்து பேருந்துகளில் திருக்குறள் மற்றும் அதன் தெளிவுரை எழுதும் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. பேருந்துகளுக்கு புதிய வண்னம் பூசுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மின்சார வாகனங்களுக்கான சந்தை இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், கூடிய விரைவில் தமிழகத்தில் 500 மின்சார பஸ்களை வாங்க அரசு ஆலோசித்து வருகின்றது. இது தவிர இரண்டாயிரம் டீசல் பஸ்களை வாங்கவும் அரசுக்கு எண்ணம் உள்ளது.
மொத்ததில், கூடிய விரைவில், அதிகரிக்கப்பட்ட தரம், புதுமையான தோற்றம், நியாயமான விலையுடன் மக்களின் பேருந்து பயணம் புதுப்பொலிவுடன் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக