
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களுக்கான புதிய கொள்கையை அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது டிவிட்டர் இந்தியா மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எது டிவிட்டர் இந்தியா மீது போக்சோ சட்டமா? அப்படி என்ன பெரிய தவறை டிவிட்டர் நிறுவனம் செய்தது என்று நீங்கள் கேட்கும் கேள்விக்கான பதில் கீழே விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படிக்கவும்.
சமூக வலைத்தளத்திற்கு புதிய கொள்கை விதி
இந்தியாவின் மத்திய அரசு சமீபத்தில் சமூக வலைத்தளங்களுக்கான புதிய கொள்கை விதிகளை வெளியிட்டது. புதிய கொள்கை விதிகளை சமூக வலைத்தள நிறுவனங்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த கொள்கையை கடைபிடிப்பதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
புதிய கொள்கையைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை
இந்த கால அவகாசத்திற்குள் சமூக வலைத்தள நிறுவனங்கள் இந்தியாவின் புதிய சமூக வலைத்தள கொள்கையைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிய கொள்கை விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் இந்தியாவில் தடை செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் செயல்பட்டு வரும் பல சமூக வலைதள நிறுவனங்கள் புதிய கொள்கையை ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதாக அறிவித்திருந்தது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் புதிய கொள்கை
இந்த பட்டியலில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற முக்கிய சமூக வலைத்தளங்களும் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் சமூக வலைத்தள கொள்கையை கடைப்பிடிக்கச் சம்மதம் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டிவிட்டர் மற்றும் இந்திய அரசின் கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அதற்கான நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தது என்பதும் அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
'போக்சோ' சட்டத்தின் கீழ் புதிய வழக்கு
இந்த நிலையில் டிவிட்டர் இந்தியா மேனேஜிங் டைரக்டர் மனிஷ் மகேஸ்வரி மீது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இவர் மீது உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது டிவிட்டர் இந்தியா மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் மற்றொரு புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிவிட்டரில் சிறுவர்களின் ஆபாசப் படங்கள்
இந்த சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிவிட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிவிட்டர் பக்கங்களில் சிறுவர்களின் ஆபாசப் படங்கள் அதிகம் பகிரப்படுவதாகத் தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக