
பல ஆயிரம் கோடி முதலீட்டில் ரிலையன்ஸ் நிறுவனம் மின் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பு ஆலையைத் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ரிலையன்ஸ் (Reliance Industries Limited) நிறுவனம் பல தரப்பட்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றது. தொலைத்தொடர்பு, இணைய சேவை, மின்சாதனங்கள் விற்பனை மற்றும் ஆயில் விற்பனை என ரிலையன்ஸ் பல துறைகளில் கொடிக் கட்டி பறந்து வருகின்றது.
இந்த நிலையில் இன்னும் ஒரு புதிய துறையில் ரிலையன்ஸ் நிறுவனம் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முறை நிறுவனம் புதிதாக மின் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் களமிறங்கியிருக்கின்றது.
ரூ. 75 ஆயிரம் கோடி முதலீட்டில் இத்தொழிலில் நிறுவனம் களமிறங்க இருக்கின்றது. திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்பளக்ஸ் எனும் பெயரில் பிரமாண்ட பேட்டரி உற்பத்தி ஆலையைத் தொடங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக ஜாம்நகர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கின்றது. இது பயன்பாட்டிற்கு வருமானால் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி நிலையமாக அமையும்.
இப்புதிய தொழிலுக்காக மூன்று விதமான திட்டங்களை நிறுவனம் வகுத்துள்ளது. முதலில் நான்கு ஜிகா தொழிற்சாலைகள் உருவாக்கப்பட இருக்கின்றன. இவற்றின் வாயிலாக புதிய ஆற்றல் ஈகோ சிஸ்டத்திற்கான அனைத்து முக்கியமான கூறுகளும் உற்பத்தி செய்யப்பட்டு அங்கேயே ஒருங்கிணைக்கப்பட இருக்கின்றன.
இந்த நான்கு ஆலைகளிலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி வரை நிறுவனம் முதலீடு செய்ய இருக்கின்றது. இதன் வாயிலாக மின்சார வாகனங்களுக்கான பேட்டரியை முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே வைத்து உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதனால் பல மடங்கு மின் வாகனங்களின் பேட்டரிகளின் விலை குறையும் வாய்ப்பு ஏற்படும். அவ்வாறு, பேட்டரியின் விலைகள் குறைந்தால் மின் வாகனங்களின் விலையும் கணிசமாகக் குறையும். ஆகையால், மின் வாகனங்களின் புழக்கமும் நாட்டில் கணிசமாக அதிகரிக்கும்.
நாட்டில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக ஒன்றிய அரசு, ஃபேம் 2 திட்டத்தின்கீழ் வழங்கும் மானியத் தொகையை அதிகரித்துள்ளது. மின்சார இரு சக்கர வாகன பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 15 ஆயிரமாக மானிய தொகை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, ஃபேம்2 திட்டத்தின் கீழ் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு பேட்டரியின் ஒவ்வொரு kWh திறனுக்கும் ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டு வந்தது. இதனை ஒரு கிலோவாட்டிற்கு தற்போது ரூ.15 ஆயிரமாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. ஆகையால், அடிப்படை மானிய தொகை அதிகரித்துள்ளது. இது மின் வாகன பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக