அமைவிடம் :
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 210 வது தேவாரத்தலம் ஆகும். காவிரி நதி ஓடிக்கொண்டிருக்கும் திசையில் இருந்து மேற்கு கரையில் கொடுமுடி நாதர் கோவில் அமைந்துள்ளது. கிழக்கு திசை பார்த்து அமைந்துள்ள இந்த கோவில் மிகவும் பிரம்மாண்டமானது.
மாவட்டம் :
அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், திருப்பாண்டிக் கொடுமுடி, கொடுமுடி, ஈரோடு மாவட்டம்.
எப்படி செல்வது?
தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது. கொடுமுடி ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 முதல் 10 நிமிட நடை தொலைவில் ஆலயம் உள்ளது.
கோயில் சிறப்பு :
ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் இடையில் ஏற்பட்ட போட்டியில் மேருமலை சிதறிவிழுந்த துண்டுகள் மணிகளாகச் சிதறியபோது அவற்றில் சிவப்பு மணி கொடுமுடியாக மாறியது என்பது தொன்நம்பிக்கை.
இத்தலத்தின் முக்கிய சிறப்பு இங்குள்ள வன்னிமரம். இம்மரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்த மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை.
இங்கே மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம். வன்னி மரத்தடியில் இவர் அருள்பாலிக்கிறார். வன்னிமரத்தை இன்னொரு முகமாக பாவித்துக் கொள்ள வேண்டும்.
அகத்தியர், பரத்வாஜர் ஆகிய முனிவர்களுக்கு இங்கு இறைவன் திருமண கோலத்தில் காட்சி தந்தார்.
ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார். சஞ்சீவி மலையை கொண்டு வருவதற்காக வடக்கு நோக்கி செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளார். வாலில்மணி கட்டப்பட்டுள்ளது.
பெருமாள் சன்னதியின் உட்புறத்தில் ஒரு தூணில் வியாக்ரபாத விநாயகரின் சிற்பம் உள்ளது. புலியின் காலும், யானையின் முகமும் கொண்ட இந்த விநாயகர் மிகவும் அபூர்வமானவர்.
கோயில் திருவிழா :
சித்திரைத் திருவிழா, ஆடி 18 திருவிழா, மார்கழி திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி இவை தவிர தமிழ், தெலுங்கு புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடி, தை அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ணஜெயந்தி, கந்தசஷ்டி சூரசம்ஹார விழா, சோமவார சங்காபிஷேக பூஜை, பங்குனி உத்திரம் என முக்கிய விசேஷ நாட்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறும்.
பிரார்த்தனை :
ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள். நாகதோஷம் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும். நவகிரக பூஜைசெய்து, வாழை மரத்திற்கு தாலிகட்டும் பழக்கமும் இங்கு உள்ளது.
நேர்த்திக்கடன் :
வேண்டுதல் நிறைவேறியவர்கள் வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் உள்ள விநாயகருக்கு காவிரியிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து ஊற்றுகின்றனர். கோயிலைச்சுற்றி எங்கும் நாகர் பிரதிஷ்டை செய்கின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக