
அமைவிடம் :
கடம்பவனேஸ்வரர் கோயில் என்பது குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 65வது தேவாரத்தலமாகவும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது.
மாவட்டம் :
அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை, கரூர் மாவட்டம்.
எப்படி செல்வது?
அனைத்து முக்கிய நகரங்களிருந்தும் குளித்தலைக்கு பேருந்து வசதிகள் உள்ளது. இக்கோவிலுக்கு பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே சென்று விடலாம்.
கோயில் சிறப்பு :
இங்குள்ள சிவன் வடக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக இருப்பது சிறப்பாகும். கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருப்பது தனி சிறப்பு.
கடம்பவன நாதர் கோவில் காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கிறது. சிவன் கோவில்கள் எல்லாம் ஒன்று கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கித் தான் அமைந்திருக்கும். கங்கைக் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு நோக்கி இருப்பது போல், காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கும் கோவில் இது ஒன்று தான்.
அம்பாளின் கூற்றுப்படி இத்தலத்தில் சிவனை வேண்டிக் கொண்டு சாப விமோசனம் பெற சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர்.
இத்தலத்தில் சப்தகன்னியர்களுக்கு இறைவன் பாதுகாப்பாக இருப்பதாக ஐதீகம்.
சப்த கன்னியர்களில் ஒருவரான சாமுண்டி துர்க்கையாவார். அதனால் இராகு காலத்தில் துர்க்கைக்குரிய வழிபாட்டை மூலவர் சன்னிதியிலேயே செய்கின்றனர். மேலும் இச்சிவாலயத்தில் துர்க்கையம்மன் சன்னதி தனியாக இல்லை.
சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன் இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார்.
கோயில் திருவிழா :
மாசியில் 13 நாட்கள் பிரம்மோற்சவம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
வேண்டுதல் :
பெண்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு சிவபெருமான் துணையாக இருந்து காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை. பொதுவாக பெண்கள் தங்களது அனைத்துக் குறைகளும் தீர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
பக்தர்கள் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்து நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றுகிறார்கள்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக