
நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
நடிகர் விஜய் பயன்படுத்தி வரும் சொகுசு கார்களில் ரோல்ஸ் ராய்ஸ் காரும் ஒன்று. இந்த காரே அவர் ரூ. 1 லட்சம் அபராதம் காரணமாக அமைந்துள்ளது. சொகுசு காரால் அபராதமா... அப்படினா, நடிகர் விஜய் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டாரா?, என கேட்கிறீங்களா, அப்படிலாம் அவர் எந்தவொரு விதிமீறிலிலும் ஈடுபடவில்லை.
தான் வாங்கிய காருக்கு வரி விதிக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கின் காரணத்தினாலேயே அவர் அபராதம் பெற்றிருக்கின்றார். ஆம், தன்னுடைய பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காருக்கு அரசு விதிக்கும் வரியில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்ற விண்ணப்பத்தை அவர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
ஆனால், இந்த கோரிக்கையை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததுடன் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதத்தையும் வழங்கியிருக்கின்றது. தொடர்ந்து, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும், சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என்றும் நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, சமூக நீதிக்காக பாடுபடுவாத கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்தல்ல. நாட்டிற்கு ஒவ்வொரு குடிமகன்களும் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு என்றும் நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் தெரிவித்தார்.
விஜய்க்கு அபராதம் விதித்த இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல கோடிகளை சம்பளமாக வாங்கும் நடிகராக வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்தார் என்ற ஆச்சரியமும் அவரது ரசிகர்கள் மத்தியில் எழும்பியிருக்கின்றது.
நடிகர் விஜய் பயன்படுத்தி வருவது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காராகும். இந்த காரின் மதிப்பு சுமார் ரூ. 3.5 கோடிகள் ஆகும். இந்த காரை அவர் 2012ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்தார். இதுபோன்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு உச்சபட்ச வரி விதிக்கப்பட்டு வருகின்றது.
15 சதவீதம் தொடங்கி 125 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. சிகேடி வாயிலாக இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கு 25 சதவீதமும், பயணிகள் வாகனங்களுக்கு 30 சதவீதமும், ட்ரக் மற்றும் பேருந்து போன்ற வாகனங்களுக்கு 30 சதவீதமும் வரி வசூலிக்கப்படுகின்றது.
இதேபோன்று சிபியூ வாயிலாக இறக்கு செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கு 50 சதவீதமும், 40 ஆயிரத்திற்கும் குறைவான அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கார்களுக்கு 60 சதவீதமும், 40 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விலைக் கொண்ட கார்களுக்கு 100 சதவீதமும் வரி வசூலிக்கப்படுகின்றது. இதுவே பயன்படுத்திய வாகனமாக இருந்தால் அதற்கு 125 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.
இத்தகைய உச்சபட்ச வரியை தவிர்க்கும் நோக்கிலேயே தளபதி விஜய் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். ஆனால், நீதிமன்றமாக அறிவுரைகளுடன், அபராதத்தையும் வழங்கி உத்தரவிட்டிருக்கின்றது. நடிகர் விஜய் பயன்படுத்தி வரும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் 6.6 லிட்டர் வி12 ரக எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 570 பிஎச்பி பவரையும், 780 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக