
பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் சாங்சங் நிறுவனத்திற்கு மாபெரும் தொகையிலான ஆர்டரை கொடுத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்த நிறுவனமே கார்களுக்கான கேமிராக்களை வாங்குவதற்காக 436 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆர்டரை கொடுத்திருக்கின்றது.
இந்த ஆர்டர் தென் கொரிய நிறுவனமான சாம்சங்கிடம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் புதிய மின்சார கார்களில் பயன்படுத்துவதற்காக இத்தகைய பெருந்தொகையில் கேமிரா கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறுவனம் மிக விரைவில் சைபர் ட்ரக் எனும் புதுமுக பிக்-அப் ட்ரக்கை உற்பத்தி செய்ய இருக்கின்றது. இந்த வாகனங்களில் பயன்படுத்துவதற்காகவே இந்த கேமிரா கொள்முதல் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. நிறுவனம் சைபர்ட்ரக்கை 2019ம் ஆண்டு நவம்பர் மாதமே வெளியீடு செய்துவிட்டது.
இதன் வெளியீட்டைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றில் இருந்து சைபர் ட்ரக்கிற்கு புக்கிங் குவிந்து வருகின்றது. ஆகையால், புதிய வாகனத்தை உற்பத்தி செய்யும் பணியில் நிறுவனம் தற்போது தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே 436 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கேமிரா கொள்முதல் செய்திருக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
டெஸ்லா மின்சார கார்கள் தானியங்கி வசதிக் கொண்டவை. ஆகையால், இந்த கார்களில் அதிகளவில் கேமிராக்கள் இடம் பெறுவது வழக்கம். இந்த மாதிரியான பயன்பாட்டிற்காகவே நிறுவனம் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராக்களுக்கு சாம்சங்கிடம் ஆர்டர் கொடுத்திருக்கின்றது.
புதிய சைபர் ட்ரக்கில் பின்பகுதியை பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள் இடம்பெறாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக அங்கு கேமிராக்களே பொருத்தப்பட இருக்கின்றன. இந்த கேமிராவே காருக்கு பின்னால் வரும் வாகனங்கள் மற்றும் நிகழ்வுகளை காட்சியாக காருக்குள் இருக்கும் திரை வாயிலாக வழங்க இருக்கின்றது.
இதுமட்டுமின்றி பார்க்கிங் செய்ய உதவுவதற்கும், தானியங்கி பிரேக்கை இயக்குவதற்கு சைபர் ட்ரக்கில் கேமிராக்களே பயன்படுத்தப்பட இருக்கின்றன. எனவேதான் 460 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கேமிராக்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா சைபர் ட்ரக் ஒரு முறை சார்ஜ் செய்தால் 980 கிமீட்டர் தூரம் பயணிக்கும் திறனுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் இந்த மின்சார கார் எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, வேகமாக சார்ஜ் ஏற்றுவது, அதிக எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்வது போன்ற சூப்பர் பவர்களுடன் சைபர் ட்ரக் எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக இந்த வாகனம் 2021ம் ஆண்டிலேயே விற்பனைக்கு வந்துவிடும் என டெஸ்லா நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், கோவிட்-19 வைரசால் ஏற்பட்ட சிக்கல் இந்த வாகனத்தின் அறிமுகத்தை தள்ளி வைத்துவிட்டது. ஆம், இப்போது இந்த ட்ரக் 2022ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக