
மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான ஜாய் 9ம் வகுப்பு தொடங்கி கல்லூரி வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு மானியம் வழங்கப்ட இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நாட்டில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசானது ஃபேம்2 திட்டத்தின்கீழ் மானியம் வழங்குதல் மற்றும் வரி சலுகையை வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு நடவடிக்கைகளின் வாயிலாக இந்த பணியை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.
இந்த மாதிரியான சூழ்நிலையில் மாநில அரசுகளும் தங்களின் பங்காக தன்னிச்சையாக மின் வாகன விற்பனையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றன. ஒன்றிய அரசின் மானியத்துடன் சேர்த்து தங்கள் சார்பாகவும் மின் வாகனங்களுக்கான மானியத்தை அவை வழங்க தொடங்கியிருக்கின்றன.
அந்தவகையில், அண்மையில் குஜராத் மாநில அரசு தனித்துவமாக மின் வாகனங்களுக்கான மானிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்கீழ் தங்களின் வாடிக்கையாளர்களும் பயனடைய வேண்டும் என்பதற்கான விண்ணப்பத்தை மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஜாய், குஜராத் ஆற்றல் மேம்பாட்டு ஏஜென்சியிடம் (Gujarat Energy Development Agency) கோரியிருந்தது.
இதைத்தொடர்ந்து, தற்போது 9, 10, 11, 12 மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு மானியம் வழங்கப்பட இருப்பதாக ஜாய் அறிவித்திருக்கின்றது. குறிப்பிட்ட சில மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 12 ஆயிரம் வரை மானியம் வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்சார ஸ்கூட்டர்களான ஜாய் இ-பைக் ஜென் நெக்ஸ், உல்ஃப், குளோப் மற்றும் மின்சார பைக்கான மான்ஸ்டர் ஆகியவற்றிற்கு சிறப்பு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. மானியம் அறிவிக்கப்பட்டிருக்கும் மின்சார இருசக்கர வாகனங்கள் அனைத்தும் குறைந்த வேக திறன் கொண்டவை ஆகும். இதனை இயக்க லைசென்ஸ், பதிவு சான்று உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படாது எனவேதான் மாணவர்களை ஈர்க்கும் வகையில் இந்த இருசக்கர வாகனங்களுக்கு சிறப்பு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார இருசக்கர வாகனங்கள் காற்று மாசுபாடு, எரிபொருள் சிக்கனம் மற்றும் பசுமை வீடு வாயு ஆகியவற்றிற்கு முற்று புள்ளி வைக்கக் கூடிய ஓர் வாகனமாக அமைந்திருக்கின்றன. எனவேதான் ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் மின் வாகனத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றன.
ஜாய் மின்வாகன உற்பத்தி நிறுவனம் இந்த சிறப்பு சலுகையை முதல் 10 ஆயிரம் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இதேபோன்று குஜராத் மாநில அரசு அறிவித்திருக்கும் மானிய திட்டமும் குறிப்பிட்ட சில ஆயிரங்கள் யூனிட்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளன.
ஏற்கனவே இந்தியாவில் மின் வாகன பயன்பாடு முன்பைக் காட்டிலும் சற்று லேசாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பெட்ரோல்-டீசல் விலை மிகக் கடுமையாக உயர தொடங்கியதை அடுத்து மக்கள் மின் வாகனங்களின் பக்கம் அதிகளவில் சாய தொடங்கியிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரின் விற்பனை விகிதம் லேசாக அதிகரித்து காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக