ஒரு தடகள வீரர் அல்லது ஒரு விளையாட்டு வீரரின் உண்மையான சொத்து, அவரது வலிமையான உடல் அல்ல. அவரது ஸ்டாமினா (stamina) எனப்படும் களைப்படையாத ஆற்றல் தான் அவரது உண்மையான சொத்து ஆகும்.
ஒரு செயலைச் செய்யும் போது புத்துணர்வுடன் களைப்படையாமல் நீண்ட நேரத்திற்கு அச்செயலை செய்வதற்கு ஸ்டாமினா உதவுகிறது. அத்துடன், உடல்நலக் குறைவுகளை எதிர்த்துப் போராடும் சக்தியையும், மன அழுத்தமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனையும் அது அளிக்கிறது. நாம் அனைவருக்கும் நமது அன்றாட வாழ்வில் புன்முறுவலுடன் பணிகளைச் செய்வதற்கு ஸ்டாமினா தேவைப்படுகிறது.
ஆகவே அத்தகைய ஸ்டாமினாவை அதிகரிப்பதற்கான சில வழிமுறைகளை இப்போது காண்போம்.
உடலை ஒருமுறை பரிசோதித்துக் கொள்ளுங்கள்
உடலில் ஸ்டாமினாவை அதிகரித்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால், உடலை ஒருமுறை அடிப்படை மருத்துவ ரீதியாகப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உடல் தகுதி என்ன என்று நன்கு அறிந்து கொள்ள முடியும். மேலும் அடிபட்டுக் காயங்கள் ஏற்பட்டாலோ, மயக்கம் வந்தாலோ, வேறு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, அவற்றை எந்த அளவுக்கு நம்மால் எதிர்கொள்ள முடியும் என்று தெரிந்து கொள்ளவும் முடியும்.
சரிவிகித சமச்சீரான உணவு உண்ணுங்கள்
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கவனியுங்கள். கொழுப்பு குறைவான உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், கொழுப்பில்லாத மாமிசம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கவும், உடல் மற்றும் மனதின் ஸ்டாமினா அதிகரிக்கவும் உதவும்.
பிடித்தமான விளையாட்டை விளையாடுங்கள்
அனைத்து விதமான வெளியரங்கு விளையாட்டுகளும் களைப்பை நீக்கவும், ஸ்டாமினாவை அதிகரிக்கவும் உதவும். ஏனெனில் விளையாட்டுக்கள் என்பது ஒருவிதமான ஏரோபிக் உடற்பயிற்சி போன்றவை. கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்கள் இதயத்தை நன்றாக வலிமைப்படுத்தும். அதன் மூலம் அதிக அளவிலான ஆக்ஸிஜன் உடல் முழுவதும் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
மெதுவாகத் தொடங்குங்கள்
ஸ்டாமினாவை அதிகரிப்பதற்கான பயிற்சிகளை இப்போது தான் செய்யத் தொடங்கியுள்ளீர்கள் என்றால், எடுத்தவுடனே கடினமான பயிற்சிகளை அசுர வேகத்தில் செய்யாமல், பயிற்சிகளை சிறிது சிறிதாக மெதுவாகச் செய்யத் தொடங்குங்கள். ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஓடிக் கடக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் மெதுவாக நடந்து செல்லுங்கள். பிறகு மெதுவாக ஓடிப் பழகுங்கள். அதுவும் குறைவான தூரம் மட்டும் ஓடுங்கள். அந்த தூரத்தைக் கடக்கும் ஸ்டாமினாவை உடல் அடையும் வரை பயிற்சிகளை சிறிது சிறிதாக அதிகரியுங்கள்.
கார்டியோவாஸ்குலார் பயிற்சிகளை செய்யுங்கள்
உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கச் செய்வதற்கு சிறந்த வழிகளில் ஒன்று தினந்தோறும் சிறிது நேரம் ஒதுக்கி கார்டியோவாஸ்குலார் பயிற்சிகளைச் செய்வது தான். ஓட்டம், நீச்சல், குதித்தல் போன்ற கார்டியோவாஸ்குலார் பயிற்சிகளை தினசரி உடற்பயிற்சிகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஓய்வு நாட்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்
ஸ்டாமினாவை அதிகரிக்க விரும்பினால், ஓய்வு நாட்களைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மிகவும் கடினமாக உணர்ந்தீர்கள் என்றால், சில நிமிடங்கள் ஓய்வுகொள்ளுங்கள்.
சிறு அளவில் நிறைய தடவை உண்ணுங்கள்
உடலுக்கு தடையின்றி சக்தி கிடைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றால், சிறு அளவில் குறிப்பிட்ட சீரான இடைவெளிகளில் நிறைய முறை உண்ணுங்கள்.
குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரியுங்கள்
உடலிலிருந்து நீர்ச்சத்து வெளியேறாமல் இருக்கவும், களைப்படையாமல் இருக்கவும், போதுமான அளவு தண்ணீர் பருகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொதுவாக குடிக்கும் தண்ணீரின் அளவு குறைந்தால், உடலின் இரத்தம் கெட்டியாகி இரத்த ஓட்டம் குறையும். இதனால், உடலுக்கு ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் வேகம் குறைந்து, உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை குறையும்.
சோடியம் அளவினைக் கட்டுப்படுத்துங்கள்
நாள் முழுவதும், பகலென்றும் இரவென்றும் பாராமல், உடற்பயிற்சிகளை செய்து கொண்டிருந்தீர்கள் என்றால், உடலிலிருந்து வியர்வை அதிகமாக வெளியேறி, அதன் மூலம் உப்புச்சத்துக்களும் உடலை விட்டு வெளியேறிவிடும். உடலில் உப்புச்சத்துக்கள் குறைந்தால், உடலில் எலக்ட்ரோலைட் சமமின்மை உண்டாகும். இதனால், ஸ்டாமினா குறைந்து எப்போதும் களைப்பாகவும் மயக்கமாகவும் உணர்வீர்கள். இந்த ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்கு எப்போதும் உடலில் உப்புச்சத்துக்கள் நீங்கா வண்ணம் கவனித்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில், இரத்தக்கொதிப்பு இருக்கிறதா என்றும் பார்த்துக் கொள்ளுங்கள்.
கார்போஹைட்ரேட்டுகளைத் தேர்ந்தெடுங்கள்
உணவில் போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவற்றிலுள்ள ஸ்டார்ச்சுகள் மற்றும் சர்க்கரையானது, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தந்து, ஸ்டாமினாவை தொடர்ந்து நீடிக்குமாறு பேணும். அதிலும் பருப்புகள். பிரட், பழங்கள், காய்கறிகள், பாஸ்தா, பால் போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த பொருட்களை உணவில் தவறாது இடம்பெறச் செய்யுங்கள்.
எல்லைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்
உடலால் முடியாத வேலைகள் மற்றும் பயிற்சிகளை உடலின் மீது திணிக்க வேண்டாம். ஏனெனில் இதன் காரணமாக காயமோ, தசைப்பிடிப்புகளோ ஏற்படலாம்.
தீய பழக்கங்களை விட்டொழியுங்கள்
நம்மிடம் சில நல்ல பழக்கங்களும், சில தீய பழக்கங்களும் இருக்கும். அது நமக்கும் தெரியும். நம்மிடம் இருக்கும் இரண்டு பழக்கங்களின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்யுங்கள். புகைப்பிடித்தல், அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், துரித உணவுகள், மசாலா உணவுகள் சாப்பிடுதல் போன்ற தீய பழக்கங்களைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனால் உடல் நல்ல தகுதியுடன் இருக்க உதவும். மேலும் இதுவும் ஸ்டாமினாவை அதிகரிக்கும் முயற்சிகளில் உதவும்.
பதிவேடு ஒன்றைப் பராமரியுங்கள்
பயிற்சிகள், முயற்சிகள், புதிய பயிற்சிகள், செயல்பாடுகள் மற்றும் இதுவரை கண்ட முன்னேற்றங்கள் ஆகியவை குறித்த பதிவுகளைத் தவறாது பதிவு செய்து வாருங்கள். இப்பதிவேட்டினை தவறாது பேணுங்கள். இதன் மூலம் உங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியும்.
தலைமை விதிகளைப் பின்பற்றுங்கள்
எந்தவொரு உடற்பயிற்சி செய்யும் முன்னரும், உடலைச் சூடேற்றும் பயிற்சிகள் செய்யவும், உடல் தசைகளை நீட்டும் பயிற்சிகளைச் செய்யவும், பின்னர் குளிர்விக்கும் பயிற்சிகளைச் செய்யவும் மறக்காதீர்கள். இதனால் உடலில் காயங்கள் உண்டாவதைத் தடுக்கலாம்.
எடை தூக்கும் பயிற்சிகளைச் செய்யுங்கள்
உங்களது ஸ்டாமினாவைக் கூட்டுவதற்கு எடை தூக்கும் பயிற்சிகளும் உதவும். ஆகவே எடை குறைவான டம்பிள்ஸ்களைத் தூக்கி பயிற்சியைத் தொடங்குங்கள். அடுத்த வாரம் சற்று எடையை அதிகரியுங்கள்.
ஓய்வும் முக்கியம்
ஸ்டாமினாவை அதிகரிக்க வேண்டுமென்றால், உடற்பயிற்சிகள் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு ஓய்வும் முக்கியம். எனவே தீவிரமான உடற்பயிற்சிகளுக்கு மத்தியில் ஒரு நாள் ஓய்வு கொடுங்கள்.
ஆரோக்கியமான உடல் எடையை பேணுங்கள்
உயரம் மற்றும் உடல் அமைப்புக்குத் தக்கவாறு, உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் பேண வேண்டியது அவசியம்.
ஆரோக்கியமான காலை சிற்றுண்டி உண்ணுங்கள்
ஒரு கப் நிறைய ஓட்ஸ் அல்லது கோதுமை பிரட் டோஸ்ட் போன்ற சத்துள்ள ஆரோக்கியமான காலை சிற்றுண்டிகளை உண்ணுங்கள். இது போன்ற உணவுகள் வயிறு நிறைந்த உணர்வினைத் தருவதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும். ஏனெனில், உடலுக்குத் தேவையான தாதுச்சத்துக்களான மக்னீசியம், மாங்கனீஸ், காப்பர் மற்றும் குரோமியம் ஆகிய சத்துக்கள் அவற்றில் அடங்கியுள்ளன.
நல்ல கொழுப்புக்களை உண்ணுங்கள்
நல்ல கொழுப்புகளுக்கும் கெட்ட கொழுப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிந்து கொள்வது அவசியம். அப்போது தான் உடலுக்கு நல்ல கொழுப்புக்களை அளிக்க முடியும். ஆளி விதைகள், மீன் எண்ணெய்கள் போன்ற கொழுப்புக்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உடலின் நரம்புகள் மற்றும் செல்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி, உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும்.
புரதச்சத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களை புரதச்சத்து உணவுகள் கொண்டுள்ளதால், நல்ல புரதச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள். இந்த அமினோ அமிலங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு மிகவும் இன்றியமையாதவை. முட்டையின் வெள்ளைக்கரு, கொழுப்பு குறைந்த பால், மீன், சிக்கன் போன்ற புரதச்சத்து மிகுந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக