
சொகுசு கார்களுக்கு இணையான வசதிக் கொண்ட ஷெர்ப் என்1200 வாகனத்தை ஓர் இந்திய இளைஞர் ரிவியூ செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் ஆஃப்-ரோடு பயன்பாட்டு திறன் கொண்ட வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஆஃப்-ரோடு பயணங்கள் அதிக உல்லாசமான பயண அனுபவத்தையும், எல்லையில்லா சவாரி மேற்கொள்ளும் ஆர்வத்தையும் வழங்கக் கூடியவை.
எனவேதான் இந்தியாவில் ஆஃப்-ரோடு பிரியர்களின் எண்ணிக்கை சமீப காலமாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இத்தகைய ஆஃப்-ரோடு பயண பிரியர்களைச் சுண்டி இழுக்கும் வசதிக் கொண்ட வாகனமே ஷெர்ப் என்1200. இந்த வாகனம் தண்ணீர், சாலை, மணல் பரப்பு என எதுவாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் கொண்டது.
ஆகையால், ஷெர்ப் என்1200 வைத்திருந்தால் எல்லை இல்லா பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பது உறுதி. இத்தகைய வாகனத்தையே இந்தியாவைச் சேர்ந்த வினீத் மிஸ்ரா எனும் இளைஞர் ரிவியூ செய்துள்ளார். அவர் ரிவீயூ செய்ததுகுறித்த வீடியோவை அவரது யுட்யூப் சேனலில் வெளியிட்டிருக்கின்றார்.
உக்ரேனை மையமாகக் கொண்டு குவாட்ரோ இன்டர்நேஷனல் உருவாக்கியதே ஷெர்ப் என்1200. இது உயிர் காக்கும் மீட்பு பணிகள், எல்லையோர ரோந்து பணிகள், பேரழிவு நிவாரணம், எண்ணெய் மற்றும் சுரங்கம் ஆய்வு பணிகளின் போது பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தின் டயர் மட்டுமே 71 இன்ச் அளவுக் கொண்டதாக இருக்கின்றது. இது, நன்கு வளர்த்த ஆணுக்கு இணையான உயரம். இதன் ரிம்களை ஸ்டோரேஜாக பயன்படுத்திக் கொள்ளும் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, எரிபொருள், தண்ணீர் என எதை வேண்டுமானாலும் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். அனைத்து (நான்கு) ரிம்களிலும் இந்த வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ரிம்மும் 58 லிட்டர் கொள்ளளவுக் கொண்டது. ராட்சத அளவில் இருக்கும் இதன் டயர்களில் காற்றை முழுமையாக நிரப்ப 30 செகண்டுகளே போதும் என கூறப்படுகின்றது. இந்த வாகனம் 26 இன்ச் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கின்றது. இது வழக்கமான வாகனங்களைக் காட்டிலும் சற்று கூடுதல் உயரம். ஆகையால் ஏணி இல்லாமல் இந்த வாகனத்தில் ஏற முடியாது. எனவேதான், வாகனத்தில் ஏறுவதற்கான ஏணிகள் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஸ்டியரிங் வீல் இருக்காது
ஷெர்ப் என்1200 வாகனத்தில் ஸ்டியரிங் வீல் கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக இரு லிவர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வலது பக்கம் திருப்ப வேண்டும் என்றால் வலது பக்கத்தில் இருக்கும் லிவரை முன்னோக்கியும், இடது பக்கம் திருப்ப வேண்டும் என்றால் இடது பக்கத்தில் இருக்கும் லிவரை முன்னோக்கியும் இயக்க வேண்டும். இரண்டு லிவர்களையும் ஒரே நேரத்தில் இழுத்தால் வாகனம் நின்றுவிடும்.
இது ஓர் இடது பக்க கையியக்கம் கொண்ட வாகனம் ஆகும். ஆகையால், இந்த லிவர் இடது பக்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. கியர்பாக்ஸ், ஆக்சலரேஷன், பிரேக், ஹேண்ட் பிரேக் உள்ளிட்டவை வழக்கமான வாகனங்களில் இருப்பதைப் போலவே இடம் பிடித்திருக்கின்றன.
ஷெர்ப் என் 1200 வாகனத்தில் 1.8 லிட்டர் டூசான் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தின் மையப்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது ஜப்பான் நிறுவனத்தின் தயாரிப்பாகும். மூன்று சிலிண்டர் கொண்ட இந்த எஞ்ஜிந் அதிகபட்சமாக 55 பிஎச்பியையும், 190 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
ஒட்டுமொத்தமாக 95 லிட்டர் வரை எரிபொருள் சேமித்து வைத்துக் கொள்வதற்கான தொட்டி ஷெர்ப் என்1200 வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் தண்ணீரில் மணிக்கு 6 கிமீ வேகத்திலும், சாலைகளில் மணிக்கு 40 கிமீ எனும் வேகத்திலும் செல்லக் கூடியது.
தண்ணீரில் செல்லும்போது படகுகளுக்கு இணையாக இது செல்லும். இதுபோன்று பன்முக வசதிக் கொண்ட காரணத்தினால் ஷெர்ப் என்1200 வாகனத்தின் விலையும் பன் மடங்கு அதிகமாக தென்படுகின்றது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 1.3 கோடிகள் என கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக