
சென்னையைச் சேர்ந்த ஓர் நிறுவனம் செல்போனை இணைக்கும் வசதியுடன் இ-மிதிவண்டியை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவே இந்தியாவின் முதல் இணைப்பு வசதிக் கொண்ட இ-சைக்கிளாகும். இதுகுறித்த மேலும் முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.
தமிழகத்தின் தலைநகரான சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் டைஜோ. இந்நிறுவனம் அதன் மின் வாகன தயாரிப்பு நிறுவனமான பெடலிஸ் எனும் பிராண்டின் கீழ் மூன்று புதுமுக இ-சைக்கிள்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
ஓ2, சி2 மற்றும் எச்2 ஆகிய பெயர்களில் அது விற்பனைக்குக் கிடைக்கும். ரூ. 79,999 என்ற ஆரம்ப விலையில் இருந்து இ-சைக்கிள் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் அதிகபட்ச விலை ரூ. 86,499 ஆகும். இந்த உச்சபட்ச விலையிலேயே சென்னை நிறுவனம் தயாரிக்கும் இ-சைக்கிள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.
இந்த அதிகபட்ச விலைக்கு ஏற்றவைதானா பெடலிஸ் இ-மிதிவண்டிகள்?
பெரும்பாலான ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் இ-சைக்கிள்களில் வீல்களுடன் மின் மோட்டாரை பொருத்தி விற்பனைக்குக் கொண்டு வருகின்றன. ஆனால், பெடலிஸ் அவ்வாறில்லாமல் சைக்கிளின் மையப்பகுதியில் மின் மோட்டாரை பொருத்தியிருக்கின்றது.
இது ஓர் 250 வாட் மின் மோட்டாராகும். இது 80 என்எம் டார்க் வரை திறன் வெளியேற்றும். இத்துடன், சிறப்பு வசதியாக கேடன்ஸ் சென்ஸ் இ-சைக்கிளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இது பெடலை ஸ்டார் அல்லது ஸ்டாப் செய்யும் தானாகவே இயங்கும். ஆனால், தேவையான அசிஸ்டென்ட் லெவலை நாமே மேனுவலாக தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.
இதைத் தொடர்ந்து மற்றுமொரு சிறப்பு வசதியாக, இந்திய இ-சைக்கிள் வரலாற்றிலேயே இல்லாத ஓர் அம்சமாக ஸ்மார்ட் போன் இணைப்பு வசதி இ-மிதிவண்டியில் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆமாங்க, தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு இ-சைக்கிளிலும் இந்த வசதி இடம் பெறவில்லை.
முதல் முறையாக பெடலிஸ் அதன் இ-சைக்கிள் செல்போன் இணைப்பு வசதியை வழங்கியிருக்கின்றது. இந்த வசதியைக் கொண்டு பல்வேறு முக்கிய தகவல்களை நம்மால் நொடிப் பொழுதில் விரல் நுனியில் பெற முடியும். குறிப்பாக இ-சைக்கிள் பற்றிய தகவலை செல்போன் வாயிலாகவும், செல்போன் வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்து பற்றிய தகவலை இ-சைக்கிளின் சிறிய திரை வாயிலாகவும் பெற முடியும் என கூறப்படுகின்றது.
இதுபோன்று இன்னும் பல சிறப்பு அம்சங்கள் பெடலிஸ் இ-மிதிவண்டியில் இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், தனித்துவமான ஓர் வசதியாக டார்க்-அசிஸ்ட் வசதி இதில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது பெடல் செய்யும்போது சுலபமான பெடலிங் அனுபவத்தை வழங்க உதவும். இத்துடன், 7 ஸ்பீடு ஷிமனோ டிரெய்லியூர் கருவியும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது மேலும் பெடலிங்கை (மிதிப்பதை) சுலபமாக்க உதவும். சி2 மற்றும் ஓ2 மாடல் இ-சைக்கிள்களில் 7ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும், எச்2 மாடலில் மட்டும் 8.6ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரிகள் சாம்சங் நிறுவனத்தினுடையதாகும். இது ஓர் கழட்டி மாட்டக் கூடிய வசதிக் கொண்ட பேட்டரியும்கூட.
இவற்றின் ரேஞ்ஜ் திறன் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இணையான ரேஞ்ஜ் இதில் எதிர்பார்க்கப்படுகின்றது. இ சைக்கிள்களின் உறுதி தன்மைக்காக அலுமினியம் 6061 உலோகத்தைக் கொண்டு ஃப்ரேம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் ரிம்கள் மக்னீசியம் அலாய்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், சி2 மாடலில் மட்டும் வழக்கமான ஒயர் ஸ்போக் கொண்ட வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரேக்கிங் வசதியைப் பொருத்தவரை இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, ப்ரீலோட் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட ஹைட்ராலிக் ஃபோர்க்குகளும் இ-சைக்கிள்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆகையால், இதில் அமர்ந்து பயணிக்கும்போது பெரியளவில் அசௌகரியமான உணர்வுகள் ஏற்படாது என தெரிகின்றது. இ-சைக்கிளை பெடலிஸ் நிறுவனம் ஆன்லைன் வர்த்தக தளம் வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. தற்போது தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக