அமைவிடம் :
ஆந்திரத்தின் புகழ்பெற்ற கோயில்களில் ஸ்ரீகாளஹஸ்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சொர்ணமுகி நதிக்கரையில் அமைந்து சைவ சமய நெறிகளைப் பின்பற்றும் மிகப் பழமையான கோயில் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252 வது தேவாரத்தலம் ஆகும்.
மாவட்டம் :
அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி, சித்தூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்.
எப்படி செல்வது?
சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் பேருந்துகள் காளஹஸ்திக்கு இயக்கப்படுகின்றன. ஆந்திர, கர்நாடக, தமிழ்நாடு என 3 மாநில அரசு பேருந்துகளும் காளஹஸ்தி வரை பேருந்துகளை இயக்கி வருகின்றன.
கோயில் சிறப்பு :
இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது வாயு தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும்.
இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும், நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும், மேற்புறத்தில் உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும், வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம்.
மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் உள்ளன.
கருவறை அகழி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோயில் ராகு-கேது பரிகாரத்தலம் என்பதால், சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணங்களின்போது மூடப்படாமல் முழு நேரமும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
இத்தலத்தில் உள்ள மற்றொரு சிறப்பு, இங்கு அர்த்தசாமப் பூஜை கிடையாது. சாயரட்சை பூஜையுடன் முடிவு. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளை, பள்ளியறையில் அப்படியே எடுத்துக் சென்று சேர்ப்பித்து விடுவார்கள்.
இத்தலம் கிரகதோஷ நிவர்த்தித் தலமாதலால் இங்கு நவகிரகங்கள் இல்லை. சனி பகவான் மட்டும் உள்ளார்.
கோயில் திருவிழா :
வருடாந்திர பிரம்மோற்சவம், ஆனித் திருமஞ்சனம், கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், நவராத்திரி, குங்குமார்ச்சனை, தெப்போற்சவம், கிரிவலம், மாத சிவராத்திரி, பௌர்ணமி புறப்பாடு, பிரதோஷ கால பூஜைகள் உள்ளிட்டவை விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.
பிரார்த்தனை :
ராகு, கேது சர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், நீண்ட கால பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள், இத்தலத்திற்கு வந்து ராகு, தோஷம் நீங்கவும், சர்ப்ப தோஷம் நீங்கவும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி அருந்தினால் பேச்சு சரளமாக வராத குழந்தைகள் கூட நன்கு பேசும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளுதவி செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
பிரசாதங்கள் :
கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் புளியோதரை, தயிர்சாதம், மிளகு வடை, லட்டு, சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்டவை பிரசாத விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக