
ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு காலத்தில் வெறும் ஸ்மார்ட்போன் மட்டும் தயாரிக்கும் நிறுவனமாக இருந்தது வந்தது, ஆனால் தற்பொழுது இந்த பிராண்ட் ஆடியோ தயாரிப்புகள், ஸ்மார்ட் டிவிகள், அணியக்கூடிய பொருட்கள் மற்றும் பிராண்டிங் ஆடைகள் என்று பல விதங்களில் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது. இப்போது இந்த பிராண்ட் விரைவில் ஒரு புதிய வகையைத் தனது பட்டியலின் கீழ் துவங்கத் தயாராக உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த முறை ஒன்பிளஸ் டேப்லெட்டுகளை உருவாக்க இருக்கிறது.
ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) புதிய டேப்லெட் சாதனம்
சமீபத்திய தகவலின் படி, ஒன்பிளஸ் நிறுவனம் டேப்லெட் பிரிவில் களமிறங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) என்ற பெயரில் புதிய டேப்லெட் சாதனத்தைப் பட்டியலிட்டுள்ளதாகத் தகவல் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் இந்த புதிய ஒன்பிளஸ் பேட் பற்றி வேறு எந்த விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
ஐரோப்பிய ஒன்றிய அறிவுசார் சொத்து அலுவலகம் உறுதியளித்த தகவல்
ஆனால், நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த புதிய ஒன்பிளஸ் பேட் சாதனத்தை உருவாக்கி வருகிறது என்பது உறுதியாகியுள்ளது. காரணம், ஐரோப்பிய ஒன்றிய அறிவுசார் சொத்து அலுவலக வலைப்பக்கத்தில் 'examination' என்ற பிரிவின் கீழ் OnePlus Pad பட்டியலிடப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் பேண்ட் சாதனத்தைத் தொடர்ந்து ஒன்பிளஸ் தற்போது டேப்லெட் பிரிவில் களமிறங்கி இருப்பது ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
ஒன்பிளஸ் பேட் 018504798 என்ற தாக்கல் எண்
இந்த ஒன்பிளஸ் பேட் சாதனம் EUIPO இணையதளத்தில் 018504798 என்ற தாக்கல் எண்ணைக் கொண்டுள்ளது. புது ஒன்பிளஸ் பேட் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் பேட் சாதனத்தை அறிமுகம் செய்தால், அது சாம்சங் கேலக்ஸி டேப் தொடர் மற்றும் வரவிருக்கும் ரியல்மே பேட் போன்ற பிற டேப்லெட்டுகளுடன் நேரடியாகப் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போவுடன் இணையும் ஒன்பிளஸ்
இந்த புதிய சாதனம் என்ன விலை பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் ஒப்போவுடன் இணைக்கப்படுவதாக இருநிறுவனங்களும் அறிவித்தன. அதன்படி ஆக்சிஜன் ஒஎஸ் கஸ்டம் ரோம் ஒப்போவின் கலர் ஒஎஸ் உடன் இணைக்கப்பட இருக்கிறது. இணைப்புக்குப் பின் ஆக்சிஜன் ஒஎஸ்-இல் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இது எப்படிச் செயல்படப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக