
பழைய வாகன அழிப்பு கொள்கையால் இந்தியாவிற்கு கிடைக்கும் பயன்களை ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பழைய வாகன அழிப்பு கொள்கை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என்பதையும், வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கு உதவும் என்பதையும், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி மீண்டும் ஒரு முறை தற்போது தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நடைபெற்ற முதலீட்டாளார்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, பழைய வாகன அழிப்பு கொள்கையை அறிமுகம் செய்தார். பழைய மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை சாலைக்கு கொண்டு வரும் எண்ணத்துடன் பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
20 ஆண்டுகள் ஆன தனிப்பட்ட வாகனங்களும், 15 ஆண்டுகள் ஆன வர்த்தக வாகனங்களும் ஃபிட்னஸ் சோதனைக்கு உட்படுத்தப்படுவதை இந்த பழைய வாகன அழிப்பு கொள்கை கட்டாயமாக்கியுள்ளது. இது குறித்து அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், ''பிரதமரால் பழைய வாகன அழிப்பு கொள்கை அறிமுகம் செய்யப்பட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்க முடிவு.
இதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் பெறுவதுடன், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்'' என்றார். கனரக வர்த்தக வாகனங்களுக்கான கட்டாய ஃபிட்னஸ் சோதனை வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதே சமயம் மற்ற வகைகளை சேர்ந்த வாகனங்களுக்கான ஃபிட்னஸ் சோதனை 2024ம் ஆண்டு ஜூன் 1ம் தேதியில் இருந்து படிப்படியாக அமலுக்கு கொண்டு வரப்படும்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஜிஎஸ்டியில் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதற்கும் பழைய வாகன அழிப்பு கொள்கை உதவி செய்யும் எனவும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். நாங்கள் ஏற்கனவே கூறியபடி பழைய வாகன அழிப்பு கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தார்.
இந்தியாவின் பல்வேறு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் பழைய வாகனங்கள் மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன. எனவே தகுதியற்ற பழைய வாகனங்களை சாலையில் இருந்து அகற்றும் நோக்கத்துடன், பழைய வாகன அழிப்பு கொள்கையை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பழைய வாகன அழிப்பு கொள்கையால் புதிய வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆட்டோமொபைல் தொழில் துறையை சேர்ந்த பலரும் பழைய வாகன அழிப்பு கொள்கையை வரவேற்றுள்ளனர். பழைய வாகன அழிப்பு கொள்கை என்பது ஆட்டோமொபைல் துறையின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும்.
பழைய வாகன அழிப்பு கொள்கையால், புதிய வாகனங்களின் விற்பனை உயரும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பதுடன், வாகன உற்பத்திக்கான செலவு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாகன உற்பத்திக்கான மூலப்பொருட்கள் இறக்குமதி குறைந்து, வாகன உற்பத்தி செலவு குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஒன்றிய அரசு தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது. இதற்காக ஃபேம் இந்தியா-2 உள்ளிட்ட திட்டங்கள் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் உள்பட பல்வேறு சலுகைகளை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இதுவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கைதான்.
அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதும், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் வெகு சமீபத்தில் ஓலா எஸ்1 மற்றும் சிம்பிள் ஒன் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
வரும் காலங்களில் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக