
அநேகமாக எல்லார் ஊரிலும் குறைந்தது விட்டு விட்டு தூரலாகவாவது மழை பெய்து கொண்டிருக்கும் என நினைக்கிறேன். இதனால் இந்த குளிர்ச்சியான சூழ்நிலைக்கு இதமாக நீண்டத்தூர பயணத்தை பலர் துவங்கி இருப்பீர்கள்.
சில பேர் இப்போதுதான் துவங்க திட்டமிட்டு வருவீர்கள். ஆனால் உண்மையில் வழக்கமான நாட்களில் சாலையில் வாகனத்தை ஓட்டுவதை காட்டிலும் மழை நேரங்களில் ஓட்டுவது சில ஆபத்துகளை உள்ளடக்கியுள்ளது.
எனவே ஈரமான மற்றும் சறுக்கி விடக்கூடிய சாலையில் பயணம் செய்கிறீர்கள் என்றால் நாங்கள் கூறவுள்ள இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். கூறவுள்ள மற்ற எல்லா விஷயத்திற்கும் முன்னதாக, ஈரமான சாலையில், நன்கு ஓட்ட தெரியும் என்றாலும் பரவாயில்லை மெதுவாக செல்ல பாருங்கள் என்பதை முதலில் சொல்லி கொள்கிறோம்.
டயர்களை பராமரித்தல் கட்டாயம்
டயர்கள் தான் ஒரு வாகனத்தின் நுனி வேர். அது சரி இல்லை என்றால் மொத்த வாகனமும் ஆட்டம் கண்டுவிடும். அதிலும் மழை காலம் என்றால் சொல்லவே வேண்டாம். சில முறை விபத்துகள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புண்டு.
எனவே டயர்கள் பழுதாகினாலோ அல்லது பழையதாகினாலோ அவற்றை உடனுக்கு உடன் மாற்றிவிடுங்கள். மழை காலம் உங்கள் பகுதியில் துவங்கிவிட்டது என்றால், வாகனத்தின் டயர்களை ஒருமுறை மாற்றிவிடுங்கள்.
ப்ரேக்குகளை சரிப்பார்க்க வேண்டும்
மழைக்காலங்களில் ப்ரேக்குகள் அவ்வளவு திறனுள்ளவைகளாக செயல்படாது. இதனால் தான் மழை பெய்யும் நேரங்களில் வேகமாக வாகனத்தை ஓட்டாதீர்கள் என சொல்கிறோம்.
ஏனெனில் அத்தகைய நேரங்களில் உங்களது வாகனத்தின் ப்ரேக்கே உங்களுக்கு எமனாக மாறிவிடலாம். ப்ரேக் அமைப்பு சமீபத்தில் தான் புதியதாக பொருத்தப்பட்டது என்றாலும், திடீர் ப்ரேக்குகளை தவிர்க்க பாருங்கள்.
மழையில் நனைந்தபடி வாகனம் ஓட்ட வேண்டாம்
மோட்டார்சைக்கிள்களில் செல்கிறீர்கள் என்றால் திடீரென மழை வந்தால் அருகில் உள்ள கடைகளிலோ அல்லது வீடுகளின் அருகிலோ நின்று கொள்ளுங்கள். ஏனென்றால் மழையில் நனைந்தப்படி பைக் ஓட்டும்போது சாலை அவ்வளவு தெளிவாக தெரியாது.
இது விபத்தில் சென்று முடியலாம். காரில் செல்கிறீர்கள் என்றால், மழையில் முழுவதுமாக நனைய நேர்ந்தால் முழுவதும் உலர்ந்த பின்பு காருக்குள் நுழைய பாருங்கள். இல்லையென்றால் இருக்கைகளிலும், முதுகு தலையணை பகுதியிலும் உலர்ந்த துணி ஒன்றை வைத்த பின்பு அதன் மீது அமருங்கள்.
நனைந்தப்படியே அமர்ந்தால் சில நாட்கள் கழித்து கேபினில் கெட்ட வாடை அடிக்க ஆரம்பிக்கும். இதில் இருந்து விடுப்படுவது அவ்வளவு சுலபம் அல்ல. பிறகு உங்களுக்கு காரை எடுத்து செல்லவே பிடிக்காது. இல்லையென்றால் கார் வாஷிற்கு விட வேண்டியதாகி விடும்.
சர்வீஸ் செய்துக்கொள்ளலாம்
மழை காலம் துவங்கிவிட்டது என்றால், ஒருமுறை உங்களது வாகனத்தை சர்வீஸ் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் மழை காலத்தில் பல்வேறு விதமான பழுதுகள் வாகனத்தில் ஏற்பட வாய்ப்புண்டு. ஏற்கனவே சிறிய பிரச்சனையாக இருந்திருந்தால், அது பெரிய பிரச்சனையாக ப்ரேக் டவுண் வரையில் கொண்டு செல்லலாம்.
எனவே உங்களுக்கே தெரியாமல் உங்களது வாகனத்தில் இருக்கும் பிரச்சனைகளை சர்வீஸ் செய்வதன் மூலம் களைய செய்வது நல்லது. இல்லையென்றால் வெளுத்து வாங்கும் மழையின் போது காரை நகர்த்த முடியாமல் சாலையின் ஒரு ஓரத்தில் நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
கார் வாஷ் செய்வது அவசியம்
மழை காலத்தில் ஏன் கார் வாஷ் செய்ய வேண்டும், அதான் மழை பெய்கிறதே என பலர் அசால்ட்டாக இருப்பீர்கள். ஆனால் உண்மையில் மற்ற நேரங்களை காட்டிலும் மழை காலத்தின் போது தான் காரை அவ்வப்போது கார் வாஷிற்கு விட வேண்டும் என்கின்றனர் மெக்கானிக்குகள்.
ஏனெனில் மற்ற சமயங்களில் சாலையின் புழுதி, தூசி மட்டுமே காரின் அடிப்பகுதியில் படும். இதனால் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படாது. ஆனால் சேறு, சகதிகளை கடக்கும்போது அவை காரின் அடிப்பகுதியில் படியலாம். மழைநீர் தேங்கலாம். இதனால் காரின் அடியில் சில பகுதிகளில் துருப்பிடித்தல் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.
மழைக்காலத்தில் டிரைவிங் செய்யும்போது நினைவில் வைத்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் கூறிவிட்டோம் என்று நினைக்கிறேன். குறைந்தப்பட்சம் மழை காலத்தில் வேகமாக வாகனத்தை ஓட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக