Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

அப்படிப்போடு... இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை களமிறக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டம்!

 அப்படிப்போடு... இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை களமிறக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டம்!

இந்தியாவில் விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது வேகமாக பிரபலமாகி வருகின்றன. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது. ஆனால் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அதன் விற்பனை சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவில் இல்லை.

இறக்குமதி வரிதான் இந்த அதிக விலைக்கு முக்கியமான காரணம். இந்திய சந்தையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், சிபியூ வழியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்திய சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எனவே அதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சப்-4 மீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரே சப்-4 மீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி என்றால், அது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான். இதற்கு போட்டியாக ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்றால், அது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிதான்.

ஐசி இன்ஜின் பொருப்பட்ட டாடா நெக்ஸான் கார் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி. இதே பாணியில் ஏற்கனவே சப்-4 மீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி செக்மெண்ட்டில் பிரபலமாக உள்ள வெனியூ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை ஹூண்டாய் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கார்வாலே செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த புதிய திட்டம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதையும் ஹூண்டாய் வெளியிடவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் வெனியூ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை ஹூண்டாய் களமிறக்கினால், அது நிச்சயமாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு கடும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

சப்-4 மீட்டர் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட எக்ஸ்யூவி300 காரை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. இதுவும் நடக்கும்பட்சத்தில், இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தற்போது ஊக்குவித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. எனவே எதிர்காலத்தில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு பெரும் அளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக