
சார்ஜ் செய்வதற்கான செலவுகூட இந்த ஆட்டோவில் இருக்காது என Vega நிறுவனம் அறிவித்துள்ளது. ஆட்டோக்குள் இருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்ய சோலார் பேனல் வசதி வழங்கப்பட்டிருப்பதாகவும், அதுவே பேட்டரியை சார்ஜ் செய்ய போதும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த மேலும் முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.
நமக்கு பிடிக்கின்றதோ, இல்லையோ இன்னும் சில ஆண்டுகளில் மின்சார வாகனங்களை மட்டுமே வாங்க முடியும் என்ற நிலை உருவாகும் வகையில் இந்தியாவில் புதுமுக மின் வாகனங்களின் அறிமுகம் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் நமது பாக்கெட்டையும் (பணத்தையும்), சுற்றுச் சூழலையும் பாதுகாக்க உதவும் என அதீத அளவில் நம்பப்படுகின்றது.
இதன் விளைவாக கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது நாட்டில் மின் வாகனங்களின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துக் காணப்படுகின்றது. தொடர்ச்சியாக அவற்றின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே இருக்கிறது. அதேசமயம், மின் வாகனங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் போதியளவில் இருக்கின்றதா என கேட்டால், இல்லை, இப்போதே அவற்றின் எண்ணிக்கை கணிசமான வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது என்ற கூற முடியும்.
நாட்டின் சில முக்கியமான நகர்புற பகுதிகளில்கூட மின் வாகனங்களுக்கான அடிப்படை வசதிகள் (சார்ஜிங் மையங்கள்) தட்டுப்பாடுடன் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இந்த மாதிரியான தட்டுப்பாடு நிலவினாலும் கவலைப்பட தேவையில்லை என ஓர் மின் வாகன நிறுவனம் தற்போது கூறியிருக்கின்றது.
அது, தன்னுடைய புதுமுக எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவிற்கு சார்ஜிங் மையம் தேவையில்லை, சூரிய ஒளி ஒன்று இருந்தால் போதும் என தெரிவித்திருக்கின்றது. நிறுவனம், சோலார் பேனல் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவை உருவாக்கி வருகின்றது. இந்த ஆட்டோவை தேவைக்கேற்ப சார்ஜ் செய்ய வெயில் இருக்கும் நிறுத்தினால் போதும் போதியளவில் அதுவே சார்ஜ் செய்து கொள்ளும்.
ஸ்ரீலங்காவைச் சேர்ந்த மின் வாகன உற்பத்தி நிறுவனம் Vega. இந்நிறுவனமே ETX எனும் பெயரில் சோலார் பேனல் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா உருவாக்கி வருகின்றது. இந்த ஆட்டோ குறித்த தகவலையே தற்போது நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் சூரிய ஒளியால் சார்ஜ் செய்து கொள்ளும் எலெக்ட்ரிக் ஆட்டோகுறித்த டீசர் வீடியோவை வெளியிட்டிருக்கின்றது.
முற்றிலும் மாறுபட்ட டிசைன் மற்றும் ஸ்டைலில் இந்த ஆட்டோ Vega உருவாக்கியிருக்கின்றது. கார்களில் இருப்பதைப் போல பூட் கதவு, அழகிய விண்ட்ஷீல்டு, மிகவும் கவர்ச்சியான ஸ்டைலிலான ஒற்றை நீள கோடு போன்ற முகப்பு மின் விளக்கு உள்ளிட்டவை இந்த ஆட்டோவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது ஆட்டோவின் தோற்றத்தையே வெற லெவலில் காட்சிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது, எதிர்காலத்தில் ஆட்டோக்கள் என்ன மாதிரியான ஸ்டைலில் இருக்கும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது. மேலும், பயன்பாட்டாளர்கள் அதிக லாபத்தையும், குறைந்த பராமரிப்பு செலவை வழங்கும் விதமாக இந்த வாகனத்தில் LFP ரக பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மேற்கூரையிலேயே சோலார் பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவே சூரிய ஒளியில் இருந்து ஆட்டோவிற்கான மின்சார திறனை சேகரிக்க உதவும். இது சார்ஜிங் மையங்களைத் தேடி அலைவதை தவிர்க்க உதவும். சோலார் பேனல் வாயிலாக சார்ஜ் செய்யும்போது ஒரு நாளைக்கு 64 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான சார்ஜை பெற முடியும்.
மிக சிறிய பேனலாக இருந்தாலும் அதிக பயன்பாட்டை வழங்கும் வகையில் ETX பயன்படுத்தப்பட்டிருக்கும் சோலார் பேனல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதராணமாக மேலே கூறப்பட்ட சார்ஜ் திறன் பற்றிய தகவல் இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவை முதலில் ஸ்ரீலங்காவில் விற்பனைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன் பின்னர் தென் ஆசிய நாடுகளில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, எந்தநெந்த நாடுகளில் ஆட்டோக்களுக்கு அதிக டிமாண்ட் நிலவுகின்றதோ அந்த நாடுகளில் அது விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், அதிகளவில் ஆட்டோ ரிக்ஷாக்களின் புழக்கம் தென்படும் நாடாக நமது இந்திாயவும் இருக்கின்றது. ஆகையால், எதிர்காலத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக