
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத இந்திய வீரர்களுக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது பரிசு அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவற விட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் அல்ட்ராஸ் கார் பரிசாக வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பிற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்தியாவை சேர்ந்த இளைஞர்களுக்கு இந்த வீரர்கள் ரோல் மாடலாக இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வீரர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை அங்கீகரிக்கும் வகையிலும், நன்றி செலுத்தும் வகையிலும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இந்த வீரர்களுக்கு டாடா அல்ட்ராஸ் கார் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த வீரர்கள் நூலிழையில் பதக்கத்தை தவற விட்டாலும், கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதையும் வென்றுள்ளனர். எனவே அவர்களை ஊக்குவிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ள இந்த முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுவாக விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குதான் கார் போன்ற பரிசுகள் வழங்கப்படும். டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த நீரஜ் சோப்ராவிற்கு, விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் போட்டியில் நூலிழையில் தோல்வியடைந்தவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வீரர்களுக்கு பரிசாக வழங்கப்படவுள்ள டாடா அல்ட்ராஸ் கார், பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா, ஹூண்டாய் ஐ20 உள்ளிட்ட கார்களுடன் டாடா அல்ட்ராஸ் போட்டியிட்டு வருகிறது. தற்போது ஒவ்வொரு மாதமும் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டாடா அல்ட்ராஸ் பதிவு செய்து வருகிறது.
இதற்கு அந்த காரின் டிசைன், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவையே காரணம். குறிப்பாக பாதுகாப்புதான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த செக்மெண்ட்டிலேயே மிகவும் பாதுகாப்பான கார் என்றால் அது டாடா அல்ட்ராஸ்தான். பொதுவாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் மிகவும் பாதுகாப்பானவை என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் டாடா அல்ட்ராஸ் காரும் பாதுகாப்பில் தலைசிறந்து விளங்குகிறது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் 5 நட்சத்திர ரேட்டிங்கை பெற்றுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது விளம்பரங்களில் இதனை பிரதானப்படுத்துகிறது. இதன் காரணமாகவே டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.
பாதுகாப்பு மட்டுமல்லாது, டிசைன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றிலும் நாங்கள் ஏற்கனவே கூறியபடி டாடா அல்ட்ராஸ் தலைசிறந்து விளங்குகிறது. இவை அனைத்தும் சேர்ந்து பிரீமியம் ஹேட்ச்பேக் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக டாடா அல்ட்ராஸ் காரை மாற்றியுள்ளன.
வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனை செய்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.
இந்த வரிசையில் வரும் மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலை போலவே, டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்திய சந்தையில் விற்பனையில் அமர்க்களப்படுத்தும் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக