ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்த மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்த இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 4,01,479 இருசக்கர வாகனங்களை (மோட்டார்சைக்கிள் + ஸ்கூட்டர்) இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 31,114 யூனிட்கள் ஆகும்.
ஹோண்டா 2 வீலர்ஸின் 4,01,479 என்கிற எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.25% குறைவாகும். ஏனெனில் 2020 ஆகஸ்ட்டில் 4,28,238 ஹோண்டா இருசக்கர வாகனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இம்முறையும் ஆக்டிவா ஸ்கூட்டர் தான் சிறப்பாக விற்பனையான ஹோண்டா இருசக்கர வாகனமாக விளங்குகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்து 4 ஆயிரத்து 659 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர், ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சுமார் 50 சதவீதத்தை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 1,93,607 ஆக்டிவா ஸ்கூட்டர்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்த ஸ்கூட்டரின் விற்பனையில் தயாரிப்பு நிறுவனம் 5.17 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வருவதை அடுத்து ஆக்டிவா ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்த ஹோண்டா தயாராகி வருகிறது.
இது குறித்து நமக்கு கிடைக்க பெற்ற தகவல்களில் ஹோண்டா ஆக்டிவாவில் 2 புதிய வேரியண்ட்களும், டியோவில் நான்கு புதிய வேரியண்ட்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த லிஸ்ட்டில் ஹோண்டா ஆக்டிவாவிற்கு அடுத்து சிபி ஷைன் பைக் 22.42% வளர்ச்சி உடன் 1,29,926 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
22.42% என்பது 2020 ஆகஸ்ட் (1,06,133 யூனிட்கள்) மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட சிபி ஷைன் பைக்குகளின் எண்ணிக்கை ஆகும். இந்த இரு மாடல்களும் மற்றும் ஹார்னெட் 2.0 பைக் மட்டுமே கடந்த ஆகஸ்ட்டில் 2020 ஆகஸ்ட்டை காட்டிலும் அதிக யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.
மற்றவை அனைத்தும் கடந்த மாதத்தில் விற்பனையில் சற்று தடுமாறியுள்ளன. மூன்றாவது இடத்தில் டியோ 26,897 யூனிட்கள் உடன் உள்ளது. 2020 ஆகஸ்ட்டில் 42,957 டியோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லி ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து கிடைத்துள்ள தகவலின்படி, 4 புதிய வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் டியோவின் விற்பனை சற்று முன்னேறலாம்.
டியோவின் புதிய வேரியண்ட்கள் டிஜிட்டல் வேகமானி மற்றும் முப்பரிமாண லோகோக்களை பெற்றுவரலாம் என எதிர்பார்க்கிறோம். நான்காவது இடத்தில் ஹோண்டா லிவோ 12,399 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. உண்மையில் மற்ற போட்டி பைக்குகளுடன் ஒப்பிடுகையில், ஹோண்டா லிவோ இந்தியாவில் சற்று தோல்வி அடைந்த மாடலே ஆகும்.
இந்த நிலை கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. 2020 ஆகஸ்ட்டில் கிட்டத்தட்ட 19 ஆயிரம் லிவோ பைக்குகள் விற்பனையான நிலையில், கடந்த மாதத்தில் 34.67% குறைவாக 12,399 யூனிட்களே விற்கப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் இதற்கடுத்துள்ள ஹோண்டா ட்ரீம் (11,743 யூனிட்கள்), க்ரேஸியா (8,618) மற்றும் யூனிகார்ன் 160 (5,679) இரு சக்கர வாகனங்களின் நிலைமையும் கிட்டத்தட்ட இவ்வாறு தான் உள்ளது.
அதிலும் குறிப்பாக, ஒரு காலத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற யூனிகார்ன் மாடலின் ஆதிக்கம் தற்சமயம் பெரிய அளவில் குறைந்துவிட்டது. எந்த அளவிற்கு என்றால், கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, இந்த லிஸ்ட்டில் முன்னிலையில் இருந்த யூனிகார்ன் 160 மோட்டார்சைக்கிள் கடந்த மாதத்தில் சுமார் 80.71% குறைவாக 5,679 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டு 7வது இடத்தில் உள்ளது.
8வது இடத்தில் உள்ள ஹோண்டா ஹைனெஸ் 350 (+ஆர்எஸ்) 2020 ஆகஸ்ட்டிற்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்டவைகளாகும். கடந்த மாதத்தில் இவை 1,047 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. 9வது இடத்தில் ஹார்னெட் 2.0 (414 யூனிட்கள்) பைக் இருக்க, 10வது இடத்தில் உள்ள எக்ஸ்-பிளேட் பைக் முற்றிலுமாக வாடிக்கையாளர்களை கவர்வதை இழந்துவிட்டது. கடந்த மாதத்தில் இந்திய சந்தையில் ஹோண்டா சிபிஆர்650 37 யூனிட்களும், ஆப்பிரிக்கா ட்வின் 10 யூனிட்களும், சிபி500 6 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக