அமைவிடம் :
காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் சிறுவயதில் காட்டில் வளர்ந்ததாலும், இக்கோயில் ஆரம்பத்தில் வனமாக இருந்ததாலும் இங்குள்ள ஆஞ்சநேயர் காட்டு வீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் பெற்றார். இக்கோவிலில் உள்ள கர்ப்பகிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது. இச்சிலை மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் :
அருள்மிகு காட்டு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், தேவசமுத்திரம், கிருஷ்ணகிரி மாவட்டம்.
எப்படி செல்வது?
தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. வாகனங்களில் வரும் பக்தர்கள், ஆவின் மேம்பாலம் அருகே, பெங்க;ர் தேசிய நெடுஞ்சாலை நோக்கிச் செல்லும் சர்வீஸ் சாலை வழியாக வர வேண்டும். அங்கிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சென்றால் கோயிலை அடையலாம்.
கோயில் சிறப்பு :
இங்குள்ள மூலவர் ஒரே கற்பாறை மீது செதுக்கப்பட்டவர் என்ற சிறப்பு பெற்றவர்.
மூலவர் கோயிலுக்கு வலதுபுறம் வெளியே ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமியின் வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அதனையொட்டி ஒரு மாடத்தில் யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். அவருடைய மாடத்திற்கு மேல் கோவிலின் மதிலை ஒட்டி சுதர்சனம் எனப்படும் கால பைரவர் காட்சி தருகிறார்.
மூலவர் கோயிலின் இடதுபுறம் ஒரு பெரிய உருண்டைப் பாறையின் மீது வளரும் நந்தி ஒன்று உள்ளது. இந்த நந்தி வளர்ந்து வரும் ஓர் அதிசயமாகும். மூலவர் கோயிலுக்குப் பின்புறம் நாகர் கற்கள் பல அமைந்துள்ளன.
இந்தக் கோயில் ஹரியும், சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் தெய்வீகத்தன்மை உடையது. ஹரியின் பிரதிநிதியாக மூலவர் ஆஞ்சநேயர் உள்ளார். அதே சமயத்தில் சிவபெருமானின் பிரதிநிதியாக வளரும் நந்தியும் இங்கே ஒரு பெரிய உருட்டு பாறையின் மீது சிற்பமாக உள்ளார்.
கோயில் திருவிழா :
அமாவாசை, பௌர்ணமி, புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகள், ஸ்ரீராம நவமி, அக்டோபர் மாதத்தில் சீனிவாச திருக்கல்யாணம், நவராத்திரியை முன்னிட்டு அக்டோபர் மாதம் ஒன்பது நாட்கள் கொலுபொம்மை வைத்து சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. ரதசப்தமியன்று சிறப்புப் பூஜை செய்து உற்சவர் பிரகார வலம் வந்து சூரிய உதய தரிசனம் சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது.
பிரார்த்தனை :
ஒரு சிவப்பு நிறத் துணிப் பையில் வெற்றிலை, பாக்கு, ஒரு ரூபாய் தட்சிணை மற்றும் தேங்காய் வைத்து சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்படுகிறது. பின்னர், இவ்வாறு பூஜித்த தேங்காயைப் பக்தர்கள் கையிலேந்தி கோவிலை 11 சுற்றுகள் சுற்றி வந்து கட்டுவதன் மூலம் வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்வது இந்தக் கோவிலின் மிகச்சிறப்பு.
கல்வி, திருமணம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, உடல்நலம், செல்வம் என பல்வேறு வேண்டுதல்களுக்காக பக்தர்கள் இந்தக் கோயிலில் தேங்காய் கட்டுகின்றனர். இந்துக்கள் மட்டுமல்லாமல் மாற்று மதத்தினரும் தங்களது வேண்டுதலுக்காக தேங்காய் கட்டுவதை இங்கு காணலாம்.
தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதும் கோயில் வளாகத்தில் கட்டிவைத்துள்ள தேங்காய்களை திரும்பப் பெற்றுச் செல்வோரும் இருக்கின்றனர். இதற்காக தேங்காய்கள் முறையாக பாதுகாக்கப்படுகின்றன.
நேர்த்திக்கடன் :
அனுமனுக்கு வடைமாலை சாற்றி, வெண்ணெய் காப்பு மற்றும் சந்தன காப்பு சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக