முகேஷ் அம்பானி ஏற்கனவே டெலிகாம் சேவை துறையில் ஜியோ நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தும் நிலையில், பியூச்சர் போன் பயன்படுத்தும் மக்கள் ஜியோ தனது 4ஜி சேவை தளத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காகக் கூகுள் நிறுவனத்துடனான கூட்டணியில் மலிவான விலையில் அதாவது வெறும் 5000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற 4ஜி ஸ்மார்ட்போனை விநாயகர் சதுர்த்திப் பண்டிகையின் போது அறிமுகம் செய்யத் திட்டமிட்டார்.
இந்நிலையில் ஜியோ-வின் மலிவுவிலை 4ஜி ஸ்மார்ட்போன் திட்டத்திற்குப் போட்டியாக ஏர்டெல் புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இது ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் கனவிற்குப் பின்னடைவாக அமைய வாய்ப்பு உள்ளது.
முகேஷ் அம்பானி - கூகுள்
முகேஷ் அம்பானி தனது டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது மூலம் கூகுள் நிறுவனத்தின் கூட்டணி சாத்தியமானது. இந்தக் கூட்டணியில் இந்தியாவில் இருக்கும் 30 கோடி பியூச்சர் போன் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்குள் கொண்டு வருவதற்காகவே ஆண்டுராய்டு மென்பொருளில் பல்வேறு மாற்றங்களைச் செய்து ஜியோ போன் நெக்ஸ்ட் மற்றும் ஜியோ போன் நெக்ஸ்ட் ப்ரோ ஆகியவை உருவாக்கப்பட்டது.
சிப் தட்டுப்பாடு
ஆனால் இந்தியா முழுவதும் விநியோகம் செய்யும் அளவிற்குப் போதுமான போன்களைச் சிப் தட்டுப்பாடு காரணமாக உருவாக்க முடியாத காரணத்தால் ஜியோ இந்தப் புதிய இரு போன்களையும் அறிமுகம் செய்ய முடியாமல் போனது. இந்தப் போன் தீபாவளி அல்லது புத்தாண்டின் போது அறிமுகம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கூகுள் - ஏர்டெல் பேச்சுவார்த்தை
இதேபோல் கூகுள் தற்போது ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், இதுவரையில் எவ்விதமான தொகையும் உறுதியாகவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஏர்டெல் ஜியோவின் இந்த மாபெரும் திட்டத்தை எதிர்த்துப் போராட முடிவு செய்துள்ள நிலையில், ஸ்மார்ட்டான ஐடியாவை யோசித்துள்ளது.
ஏர்டெல் ஸ்மார்ட்டான திட்டம்
ஆம் பார்தி ஏர்டெல், ஜியோ நிறுவனத்தைப் போலவே பியூச்சர் போன் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய போன்களை அறிமுகம் செய்யாமல் ஏற்கனவே சந்தையில் இருக்கும் போன் பிராண்டுகள் உடன் குறிப்பாக மலிவு விலை ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பிராண்டுகள் உடன் கூட்டணி வைக்க முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது.
டெலிகாம் சேவை உடன் இணைப்பு
இந்தக் கூட்டணி திட்டத்தில் 4ஜி ஸ்மார்ட்போன் பிற நிறுவனங்களுடையதாக இருந்தாலும் தனது டெலிகாம் சேவை திட்டத்துடன் இணைத்து அளிக்க முடிவு செய்துள்ளது. இந்தச் சேவை திட்ட இணைப்பு மூலம் ஸ்மார்ட்போன்களின் விலை பெரிய அளவில் குறைக்கப்பட்டு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது பார்தி ஏர்டெல்.
முக்கிய நிறுவனங்கள்
இந்த மாபெரும் திட்டத்திற்காகச் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை சந்தையை வைத்திருக்கும் லாவா, கார்பன் மற்றும் HMD ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கோ-பிராண்டிங் திட்டம்
இந்தக் கோ-பிராண்டிங் திட்டம் மூலம் பார்தி ஏர்டெல் இந்தியாவில் சுமார் 12 கோடி 2ஜி வாடிக்கையாளர்களைத் தனது 4ஜி சேவை தளத்திற்குள் இணைக்க முடியும் என ஏர்டெல் நம்புகிறது. இதேவேளையில் யார் முதலில் மலிவு விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப் போகிறார்கள் என்பது தான் மக்களின் முக்கியக் கேள்வியாக உள்ளது..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக