அமைவிடம் :
சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை என்னும் ஊரில் மலை மீது அமைந்துள்ள முருகன் கோயிலாகும். இந்திய புகழ்பெற்ற இந்த கோயிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்தபின் தயிர் புளிப்பதில்லை என்ற அதிசியமும் நிகழ்கிறது.
மாவட்டம் :
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சென்னிமலை, ஈரோடு மாவட்டம்.
எப்படி செல்வது?
ஈரோட்டில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது சென்னிமலை. ஈரோடு மற்றும் பெருந்துறையில் இருந்து இத்தலத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
கோயில் சிறப்பு :
இங்குள்ள முருகப்பெருமானுக்கு இரண்டு தலைகள் உள்ளன. இது போன்று எந்த தலத்திலும் கிடையாது. அக்னிஜாத மூர்த்தி என்பது இதுவாகும்.
தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு திருக்கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் இரண்டு அழகிய பொதி காளைகள் மூலம் தினமும் அடிவாரத்திலிருந்து திருமஞ்சனத் தீர்த்தம் மலைக்குக் கொண்டு செல்லும் சிறப்பு தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு.
கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்திலும்கூட தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது.
வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது.
அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம்.
நோய் தீர்க்கும் வல்லமை கொண்ட, சஞ்சீவி மூலிகைகள் பல சென்னிமலையில் உள்ளன.
கோயில் திருவிழா :
சித்திரை வருட பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி - சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
பிரார்த்தனை :
கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. இதுதவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது. இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப் பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.
நேர்த்திக்கடன் :
முருகனுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது. கிருத்திகை அன்னதானம், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்கி காது குத்தல், சஷ்டி விரதம் இருத்தல். தவிர சண்முகார்ச்சனை, முருக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காக செய்யலாம்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக