நடுரோட்டில் இளம் காதல் ஜோடி ஒன்று பைக்கில் நேருக்கு நேர் கட்டியணைத்தப்படி பயணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வைரலாகி வரும் வீடியோவினை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
பொது சாலையில் சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் ஸ்டண்ட் செய்யும் வீடியோக்களை இதற்குமுன் பலமுறை நமது செய்திதளத்தில் பார்த்துள்ளோம். இதில் சில சம்பவங்கள் காதல் ஜோடிகளால் ஏற்பட்டுள்ளன. இந்த வகையில் தற்போது மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து வெளியாகியுள்ள வீடியோவினை தான் கீழே காண்கிறீர்கள்.
இந்த வீடியோவில் பெண் ஒருவர், இயங்கி கொண்டிருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்க்கில் அமர்ந்தவாறு பைக் ஓட்டுனரை கட்டியணைத்தப்படி பயணம் செய்துள்ளார். டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 மோட்டார்சைக்கிளில் நடந்துள்ள இந்த சம்பவத்தை அதே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்தப்படி படமாக்கியுள்ளனர்.
இதனை கண்ட பைக் ஓட்டுனர், வீடியோவில் படமாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக பைக்கின் வேகத்தை கூட்டுகிறார். இருப்பினும் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான வீடியோ ஆதாரத்தை இந்த கார் டிரைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்பின் இணையத்தில் இந்த வீடியோ வைரலாக, இது சம்பந்தப்பட்ட போலீஸாரின் கவனத்திற்கும் சென்றுள்ளது. வீடியோவை வைத்து இந்த சம்பவம் போபாலில் விஐபி சாலையில் நடைபெற்றுள்ளது என்பதை உறுதிப்படுத்தி கொண்ட போலீஸார், இந்த அப்பாச்சி பைக்கின் நம்பர் ப்ளேட்-ஐ வைத்து அதன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
இந்த வீடியோ மட்டுமில்லாமல், இது தொடர்பான வேறொரு சிசிடிவி வீடியோவும் தங்களுக்கு கிடைத்துள்ளதாக போபால் போலீஸார் தெரிவித்துள்ளனர். வீடியோவில் பைக் ஓட்டுனர், ஆபத்தான முறையில் அமர்ந்து பயணம் செய்த பெண் என இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. இதையெல்லாம் போலீஸார் நிச்சயம் தனது புகாரில் சேர்த்து கொள்வர்.
இதுகுறித்து போபால் மாநகர வடக்கு பிரிவு சூப்பிரண்ட் போலீஸ் அதிகாரி விஜய் கட்ரி கருத்து தெரிவிக்கையில், இந்த இளைஞரை (பைக் ரைடர்) விரைவில் பிடித்துவிடுவோம். இவ்வாறு ஆபத்தான, மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஸ்டண்ட்டை பொது சாலையில் மேற்கொண்டதற்காக அவரது மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏனெனில் இத்தகைய ஸ்டண்ட்கள் மேற்கொள்பவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களுக்கு அருகில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை உருவாக்கும் என்றார். இவ்வாறான ஸ்டண்ட்களை பொது சாலையில் மேற்கொண்டவர்கள் பலர் மீது இதற்குமுன் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆதலால் இந்த இளம் ஜோடி மீது வழக்கு பதிவு செய்வதில் போபால் போலீஸாருக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இருப்பினும் இதற்கு முந்தைய தண்டணைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் இருந்து தற்போதைய இளம் தலைமுறையினர் எந்தவொரு பாடத்தையும் கற்று கொள்ளவில்லை என நினைக்கும்போது நிச்சயமாக போலீஸாருக்கு சற்று கவலையை ஏற்படுத்தும்.
தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தினர் இவ்வாறான செயல்களில் அதிகளவில் ஈடுப்பட காரணம் இணையம் தான். சமூக வலைத்தள பக்கங்களில் நெட்டிசன்களை கவரவே இத்தகைய ஸ்டண்ட் வீடியோக்களை இளைஞர்கள் பெரும்பாலும் பதிவேற்றம் செய்கின்றனர்.
இந்த வகையில் மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி கார்களிலும் இத்தகைய ஸ்டண்ட்கள் ஒருபுறம் தொடர்ந்து அரங்கேறியவாறு தான் உள்ளன. திறந்த சாலைகளில் இந்த ஸ்டண்ட்களை மேற்கொள்வது எவ்வளவு ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது என்பது மேற்கொள்ளும் அத்தகையவர்களுக்கு தெரிவதில்லை.
ஆதலால் போக்குவரத்து விதிகளை தற்போதைய இளைஞர்களுக்கு தெளிவாக புரிய வைப்பதில் அரசாங்கங்கள் இன்னும் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்கிற கருத்து பரவலாக உள்ளது. ஏனெனில் அப்போதுதான் இவ்வாறான செயல்கள் குறையும், தண்டனை மட்டுமே இதற்கு ஒரே நிரந்தர தீர்வாக இருக்காது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக