தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (TVS Motor Company) மிக விரைவில் புதுமுக இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் தனது புதுமுக தயாரிப்பின் டீசர் படங்களை இணையத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளது.
புதிய பைக்கின் அறிமுகம் செப்டம்பர் 16அன்று அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்புதிய இருசக்கர வாகனம் 2021 டிவிஎஸ் ரைடர் (TVS Raider) என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இன்னும் இப்பைக் பற்றிய முக்கிய விபரங்களை நிறுவனம் வெளியிடாத நிலையே தற்போது வரை தென்படுகின்றது.
அதேவேலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்களின்படி புதிய டிவிஎஸ் 125சிசி பிரிவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் 125சிசி பிரிவில் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125) பைக்கிற்கு போட்டியாக புதிய டிவிஎஸ் ரைடர் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.
இந்த பைக்கிற்கு மட்டுமின்றி ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி (Honda CB Shine SP) பைக்கிற்கும் அப்பைக் போட்டியாக அமைய இருக்கின்றது. டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கை புத்தம் புதிய பிளாட்பாரத்தில் வைத்து கட்டமைத்திருக்கின்றது. ஆகையால், பல்வேறு புதிய மற்றும் நவீன அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் ரைடர் பைக்கில் இடம் பெற இருக்கின்றன.
அந்தவகையில், எல்இடி மின் விளக்குகள், தனி தனியாக பிரிக்கப்பட்ட இருக்கைகள், அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் முன் பக்க ஃபோர்க்குகள், மோனோ ஷாக் மற்றும் எல்இடி வால் பகுதி மின் விளக்குகள் உள்ளிட்டவை ரைடரில் இடம் பெற இருக்கின்றன. பைக்கை மிகவும் மாடர்ன் தோற்றம் கொண்ட வாகனமாக காட்சியளிப்பதற்காக இதன் மின் விளக்கு புதுமையான லுக்கில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
இத்துடன், முழு டிஜிட்டல் ரிவர்ஸ் டிஸ்பிளேவும் இப்பைக்கில் வழங்கப்பட இருக்கின்றது. இதனை தற்போது வெளியாகியிருக்கும் டீசரில் நீங்கள் காணலாம். டீசர் வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் என்ன அம்சங்கள் எல்லாம் இடம் பெற இருக்கின்றது என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.
அறிமுகத்தின்போது அதுகுறித்த தகவல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுமார் ரூ. 80 ஆயிரம் தொடங்கி ரூ. 90 ஆயிரம் வரையிலான விலையில் இப்பைக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் 125 சிசி வாகன பிரியர்களைக் குறி வைத்து இப்பைக் களமிறக்கப்பட இருக்கின்றது.
டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவின் 125சிசி பைக் பிரிவில் எந்தவொரு மோட்டார்சைக்கிளையும் விற்பனைக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்னதாக இப்பிரிவில் ஸ்டார் சிட்டி125 மற்றும் விக்டர் ஆகிய இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இவை தற்போது விற்பனையில் இல்லை.
இந்த நிலையிலேயே 125 சிசி மோட்டார்சைக்கிள் வாகன பிரிவில் களமிறங்கும் வகையில் நிறுவனம் புதிய ரெய்டர் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டிரக்கின்றது. அதேவேலையில் நிறுவனம் 125 சிசி ஸ்கூட்டர்கள்பிரிவில் என்டார்க் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.
இந்த பிரிவுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. புதிய ரெய்டர் பைக்கில் 10 பிஎச்பி மற்றும் 11 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 125 சிசி எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வசதி உடன் இது விற்பனைக்குக் கிடைக்கும்.
டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் ஸ்கூட்டரிலும் 125 சிசி எஞ்ஜினை அறிமுகம் செய்ய இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் என்டார்க் 125 மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே எஞ்ஜினே ஜூபிடர் 125 ஸ்கூட்டரிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் 125 சிசி இருசக்கர வாகனங்களுக்கு வரவேற்பு அதிகம் என்கிற காரணத்தினால் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த பிரிவை மையப்படுத்தி தனது புதுமுக வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றன. அந்தவகையில், டிவிஎஸ் நிறுவனம் இம்முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக