இந்தியாவில் 40, 50 வருட பழமையான நிறுவனங்கள், இன்னுமும் சந்தையிலும், நிர்வாகத்திலும் ஆதிக்கத்துடன் இயங்கி வரும் நிறுவனங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு, அப்படி இந்தியாவில் உருவான நிறுவனம் தான் யுரேக்கா போர்ப்ஸ்.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா குடும்பத்திற்கு அடுத்ததாக அதிகளவில் பங்குகளை வைத்துள்ள நிறுவனமாக விளங்கும் ஷபூர்ஜி பல்லோன்ஜி குரூப் கட்டுப்பாட்டிலும், நேரடி நிர்வாகத்தின் கீழ் யுரேக்கா போர்ப்ஸ் இயங்கி வருகிறது.
யுரேக்கா போர்ப்ஸ்
ஷபூர்ஜி பல்லோன்ஜி குரூப் அதிகளவிலான கடனில் தவிக்கும் காரணத்தால் கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வர்த்தகம் மற்றும் பல சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்தது. இதில் மிக முக்கியமான ஒன்று யுரேக்கா போர்ப்ஸ்.
அட்வென்ட் இண்டர்நேஷனல் நிறுவனம்
பல மாதங்களாகப் பல நிறுவனங்களுடன் தொடர் ஆலோசனை செய்து யுரேக்கா போர்ப்ஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை அமெரிக்கத் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான அட்வென்ட் இண்டர்நேஷனல் நிறுவனம் வாங்க ஒப்புதல் அளித்துள்ளதாக ஷபூர்ஜி பல்லோன்ஜி குரூப் அறிவித்துள்ளது.
4,400 கோடி ரூபாய் டீல்
யுரேக்கா போர்ப்ஸ் நிறுவனத்தின் 72.56 சதவீத பங்குகள் மற்றும் கடன் நிலுவை உடன் சுமார் 4,400 கோடி ரூபாய்க்கு வாங்க இரு தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளதாக ஷபூர்ஜி பல்லோன்ஜி குரூப் தெரிவித்துள்ளது. ஷபூர்ஜி பல்லோன்ஜி குரூப் தற்போது 30,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் சிக்கியுள்ளது.
Forbes & Co நிறுவனம்
Forbes & Co நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளைக் கொண்ட கிளை நிறுவனமாக இருக்கும் யுரேக்கா போர்ப்ஸ், தனியாகப் பிரிக்கப்பட்டுத் தற்போது திட்டமிடப்பட்டு உள்ள படி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. ஆனால் அதற்கு நீதிமன்ற ஒப்பதல் பெற வேண்டும்.
73 சதவீத பங்குகள்
ஷபூர்ஜி பல்லோன்ஜி குரூப்-யிடம் இருந்து அட்வென்ட் இண்டர்நேஷனல் யுரேக்கா போர்ப்ஸ் நிறுவனத்தில் 73 சதவீத பங்குகளை வாங்குவது மட்டும் அல்லாமல் மீதமுள்ள 26 சதவீத பங்குகளை வாங்க எதிர்காலத்தில் விருப்பம் தெரிவித்துள்ளது.
2 கோடி வாடிக்கையாளர்கள்
யுரேக்கா போர்ப்ஸ் இந்தியாவில் 2 கோடி வாடிக்கையாளர்களை 450 நகரம் மற்றும் டவுன் பகுதிகளில் வைத்துள்ளது.இது மட்டும் அல்லாமல் நேரடியாகத் தனது தயாரிப்புகளை விற்பனை செய்யச் சுமார் 20,000 கடைகளை வைத்துள்ளது. மேலும் யுரேக்கா போர்ப்ஸ் ஈகாமர்ஸ் தளத்தின் வாயிலாகவும் தனது விற்பனை செய்து வருகிறது.
போட்டி
இவை அனைத்திற்கும் தாண்டி யுரேக்கா போர்ப்ஸ் உலகின் 53 நாடுகளில் தனது வர்த்தகத்தை வைத்துள்ளது. யுரேக்கா போர்ப்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்ற வார்பர்ஸ் பின்கர்ஸ், Electrolux ஆகிய நிறுவனங்களும் போட்டிப்போட்டது. ஆனால் 2007 முதல் இந்தியாவில் சுமார் 2.2 பில்லியன் டாலர் தொகையைச் சுமார் 16 நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள அட்வென்ட் இண்டர்நேஷனல் கைப்பற்றியுள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இந்திய நுகர்வோர் சந்தையில் அட்வென்ட் இண்டர்நேஷனல் யுரேக்கா போர்ப்ஸ் உடன் சேர்த்து 5 நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே அட்வென்ட் இண்டர்நேஷனல் இந்தியாவில் கிராம்டன் கீரிவிஸ் (எலக்ட்ரிகல் பொருட்கள்), டிக்சி டெக்ஸ்டைல் (ஆண்கள் உள்ளாடை), என்னாமோர் (பெண்கள் உள்ளாடை) மற்றும் டிஎப்எம் (ஸ்னாக்ஸ் வர்த்தகம்) ஆகிய நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக