அமைவிடம் :
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கல்லூர் பகுதியில் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் எட்டுக்கரங்கள் கொண்ட இக்கோவில் மூலவரான பத்ரகாளி 'கொடுங்கல்லூரம்மை" என்றழைக்கப்படுவதுடன், கண்ணகியாகவும் வழிபடப்படுகின்றாள்.
மாவட்டம் :
பகவதி அம்மன் திருக்கோவில், கொடுங்கலூர், திருச்சூர் மாவட்டம், கேரளா மாநிலம்.
எப்படி செல்வது?
கேரளாவின் திருச்சூரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர், குருவாயூரில் இருந்து சுமார் 52 கிலோமீட்டர், எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொடுங்கலூர். கொச்சி, குருவாயூர், திருச்சூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
கோயில் சிறப்பு :
கருவறையில் இருக்கும் அம்மன் உருவம் எதிரியை அழிக்கும் கோப முகத்துடன் காணப்படுகிறது. எட்டு கை, பெரிய கண், சிறிய இடை, ஆறடி உயரத்துடன், வலதுகால் மடக்கி இடதுகால் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் அன்னை வீற்றிருக்கிறார்.
அன்னையின் சிலை, பலா மரத்தினால் செய்யப்பட்டது. எனவே அம்மனுக்கு சாதாரண அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை. 'சாந்தாட்டம்" என்ற சிறப்பு அபிஷேகம் மட்டும் செய்யப்படுகிறது.
ஆரம்பக்காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிர தெய்வமாக இருந்துள்ளார். அப்போதெல்லாம் இவளுக்கு உயிர்ப்பலியிட்டும், கள் நைவேத்தியம் செய்தும் வழிபாடு செய்துள்ளார்கள்.
அதன் பின் ஆதிசங்கரர் எந்திர பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார். ஆனால் பகவதியை இப்போது பார்த்தாலும் கோபத்துடன் பார்ப்பதை போலவே தோன்றும். உயிர்பலிக்கு பதில் குங்குமத்தில் குருதி பூஜையும், கள்ளிற்கு பதில் இளநீரும், மஞ்சள்பொடியும் கலந்து நைவேத்தியம் செய்வதற்காக ஒரு நம்பூதிரியை ஆதிசங்கரர் நியமித்தார். அதன் தொடர்ச்சியாக இன்றும் இதன்படி நைவேத்தியம் செய்யப்படுகிறது.
அம்மனின் கர்ப்பகிரகத்திற்கு அருகே ஒரு ரகசிய அறை உள்ளது. இதையும் மூலஸ்தானமாக கருதி இதற்கும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். சிவனுக்கு கிழக்கு நோக்கி தனி சன்னதி உள்ளது. ஒரே இடத்தில் நின்று பகவதியையும், சிவனையும் தரிசிக்கும்படியான அமைப்பு இங்குள்ளது சிறப்பாகும்.
கோயில் திருவிழா :
தை மாதம் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை 'தாழப்புலி" என்ற உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமங்கலி பெண்கள் எண்ணெய், குங்குமம், மஞ்சள், பூ இவைகளை மேளதாளத்துடன் அம்மனுக்கு படைப்பார்கள். நவராத்திரி, சிவராத்திரி, ஆடி வெள்ளி தினங்களில் இங்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
பிரார்த்தனை :
வெப்ப நோய், கண் பார்வை கோளாறு, மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல அம்மனை வழிபட்டால் அவை அனைத்தும் நிவர்த்தியாகும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் 'துலாபாரம்" செலுத்துவதாக வேண்டிக் கொண்டால், விரைவில் அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக