டிரைவர் சோர்வடைந்தால் காரே எப்படி அதனை கண்டுபிடித்து எச்சரிக்கை செய்கிறது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உங்கள் காரின் டேஷ்போர்டில் பல்வேறு எச்சரிக்கை விளக்குகள் ஒளிரும். அவை ஒவ்வொன்றுக்கான அர்த்தம் என்ன? என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் வாசகர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஏனெனில் கடந்த காலங்களில் இது தொடர்பான செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.
ஆனால் டேஷ்போர்டில் காபி கப் (Coffee Cup) வடிவத்தில் ஒரு எச்சரிக்கை விளக்கு ஏன் ஒளிர்கிறது? என்பது பலருக்கும் தெரியாது. காபி கப் எச்சரிக்கை விளக்கு ஏன் ஒளிர்கிறது? அதற்கு என்ன அர்த்தம்? இந்த விளக்கு எரிந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த செய்தி தொகுப்பு விடை அளிக்கிறது.
இது டிரைவர் ட்ரொஸினெஸ் டிடக்ஸன் (Driver Drowsiness Detection) வசதிக்கான எச்சரிக்கை விளக்கு ஆகும். அதாவது டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் வசதி. இன்றைய மாடர்ன் கார்களில் இந்த வசதியை நீங்கள் பார்க்க முடியும். டிரைவர் தூங்குவதை கண்டறிந்து, அவரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்துவதுதான், இந்த வசதியின் முக்கிய சிறப்பம்சம்.
டிரைவர் தூங்குவதை காரே கண்டறிந்து விடுமா? எப்படி? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இந்த வசதி எப்படி செயல்படுகிறது? என்பதை உங்களுக்கு தெளிவாக விளக்குகிறோம். காரை நீங்கள் நீண்ட நேரம் ஓட்டி கொண்டிருந்தால், நிச்சயமாக சோர்வடைந்து விடுவீர்கள். நேரம் ஆக ஆக சோர்வு அதிகரித்து கொண்டே செல்லும். இதன் காரணமாக தூக்கம் ஏற்படலாம்.
தூக்கம் வந்தால் டிரைவரின் கவனம் சிதறி விடும். இதுபோன்ற சூழல் ஏற்பட்டால், அபாயகரமான விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இந்த பிரச்னை தொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், தூக்க கலக்கம் காரணமாக டிரைவரின் கவனம் சிதறுவதுதான், பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணம் என கண்டறியப்பட்டது.
அதாவது உலகில் நடைபெறும் மொத்தம் சாலை விபத்துக்களில், சுமார் 25 சதவீத விபத்துக்களுக்கு இதுவே காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சாலை விபத்துக்களை குறைப்பதற்காக, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் வசதி கண்டறியப்பட்டுள்ளது. அதிநவீன எலெக்ட்ரானிக் சென்சார்கள் அடிப்படையில் இந்த வசதி இயங்குகிறது.
டிரைவரின் நடத்தையை இந்த சென்சார்கள் துல்லியமாக கண்டறிந்து விடும். டிரைவர் கார் ஓட்டும்போது, அவரின் நடத்தையை இந்த அமைப்பு ஆய்வு செய்யும். டிரைவர் காரை ஓட்ட தொடங்கிய உடனேயே, இந்த அமைப்பு அவரை கண்காணிக்க தொடங்கி விடும். டிரைவர் ஸ்டியரிங் வீலை எப்படி கையாள்கிறார்? என்பதை இந்த அமைப்பு தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்கும்.
எனவே டிரைவர் நீண்ட நேரமாக ஸ்டியரிங் வீலை எதுவும் செய்யாமல், பின்னர் திடீரென அதனை கையாண்டால் இந்த அமைப்பு உடனடியாக கண்டறிந்து விடும். பொதுவாக தூக்க கலக்கத்தில் உள்ள டிரைவர்கள், ஸ்டியரிங் வீலை பிடித்து கொண்டே தூங்கி விடுவார்கள். ஸ்டியரிங் வீலை திருப்புவது போன்ற எதையும் செய்ய மாட்டார்கள்.
ஆனால் பின்னர் திடீரென தூக்கத்தில் இருந்து விழித்து, ஸ்டியரிங் வீலை திருப்புவது போன்றவற்றை செய்வார்கள். இப்படி நடக்கும்பட்சத்தில், அதனை இந்த அமைப்பு கண்டறிந்து விடும். மேலும் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளும். இது டிரைவர் சோர்வடைந்து விட்டார், கவனத்தை இழந்து வருகிறார் என்பதை தெளிவாக காட்டும் அறிகுறி.
எனவே இதுபோன்ற சூழல் ஏற்பட்டால், டேஷ்போர்டில் காபி கப் விளக்கு எரிந்து, ஓய்வு எடுக்கும்படி டிரைவரை எச்சரிக்கை செய்யும். டேஷ்போர்டில் எச்சரிக்கை விளக்கு ஒளிர்வதுடன், ஒலியும் எழும்பும். பொதுவாக 'பீப்' சப்தம் வரும். டிரைவர் தூங்குவதை கண்டறியும் அமைப்பு, மேலும் ஒரு சில விஷயங்களையும் ஆய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், காரின் வேகம், நேரம் மற்றும் சுற்றுப்புற வானிலை ஆகியவை அடங்கும். மேலும் டிரைவர் காரின் மற்ற கண்ட்ரோல்களை பயன்படுத்தினாரா? என்பதையும் இது கவனத்தில் எடுத்து கொள்ளும். எந்த கண்ட்ரோலையும் பயன்படுத்தாவிட்டால், டிரைவர் தூங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன அல்லவா? எனவேதான் இதுவும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
பின்னர் இந்த அனைத்து காரணிகளையும், இந்த அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இதன்பின்பு உண்மையான டிரைவிங் பேட்டர்ன் உடன் இந்த காரணிகள் ஒப்பிடப்பட்டு, டிரைவரின் களைப்பு குறியீடு (Tiredness Index) கணக்கிடப்படும். இந்த மதிப்பு குறிப்பிட்ட அளவை தாண்டினால், ஓய்வு எடுக்கும்படி டிரைவருக்கு எச்சரிக்கை வரும்.
இந்த எச்சரிக்கை வருகிறது என்றால், காரை நிறுத்தி விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பது நல்லது. ஆனால் இந்த தொழில்நுட்பத்திற்கு ஒவ்வொரு கார் நிறுவனமும் வெவ்வேறு பெயர்களை சூட்டியுள்ளன. எனினும் டிரைவர் சோர்வடைந்துள்ளாரா? என்பதை கண்டறிந்து எச்சரிக்கை செய்வதுதான் இந்த தொழில்நுட்பத்தின் தலையாய பணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக