இந்திய வர்த்தகச் சந்தையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வர்த்தகக் குழுமங்கள் இரண்டு, ஒன்று டாடா குழுமம், மற்றொன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இதில் டாடா குழுமம் உற்பத்தி முதல் சேவைத் துறை வரை பல்வேறு துறைகளில் 100க்கும் அதிகமான நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்தடுத்து புதிய வர்த்தகத் துறையில் இறங்கி வரும் நிலையில் தற்போது ஷாட் வீடியோ மற்றும் கன்டென்ட் பிளாட்பார்ம்-ஆன கிளான்ஸ் (GLANCE) தளத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கிளான்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போனின் லாக் ஸ்கிரீனில் கன்டென்ட் டிஸ்பிளே செய்யும் சேவையும், தற்போது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஷாட் வீடியோ தளமான ரோபோசோ செயலியையும் வைத்துள்ளது. கிளான்ஸ் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதும் இயங்கி வரும் காரணத்தால் குறைந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
டிஜிட்டல் தளங்களில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிக்டாக் இந்திய வர்த்தகத்தைக் கைப்பற்றும் என வதந்திகள் கடந்த வருடம் வெளியான நிலையில் தற்போது இதே ஷாட் வீடியோ மற்றும் டிஜிட்டல் கன்டென்ட் பிரிவில் ரிலையன்ஸ் முதலீடு செய்ய உள்ளது.
முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது கிளான்ஸ் நிறுவனத்தில் 200 முதல் 250 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து 15 முதல் 20 சதவீத பங்குகளைக் கைப்பற்றத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இரு நிறுவனங்களும் இதுகுறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கிளான்ஸ் ஆகிய இரு நிறுவனத்திலும் கூகுள் முதலீடு செய்துள்ள காரணத்தால் இந்த முதலீட்டுத் திட்டம் எளிதாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஜியோ - கூகுள் இணைந்து உருவாக்கிய மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ப்ளூம்பெர்க் உட்படப் பலர் இந்த முதலீடு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் கிளான்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான இன்மொபி வதந்திகளுக்கும் மற்றும் ஊகங்களுக்கும் பதில் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கிளான்ஸ் தனது ஈகாமர்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவு வர்த்தகத்தை மேம்படுத்த சோஷியல் காமர்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஷாப் 101 நிறுவனத்தைக் கைப்பற்றியது. சீனா-வின் ஷாட் வீடியோ செயலிகளான டிக்டாக் உட்படப் பலவும் தடை செய்யப்பட்ட நிலையில் இந்திய ஷாட் வீடியோ மற்றும் டிஜிட்டல் எண்டர்டெயின்மென்ட் செயலிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக