அமைவிடம் :
அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில் சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ஓம் சக்தி நகரில் அமைந்துள்ளது.
எப்படி செல்வது?
அம்பத்தூர் ஓ.டி.பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் சாலையில் உள்ளது கள்ளிக்குப்பம். இங்கிருந்து பிரியும் ரோட்டில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஓம் சக்தி நகர் உள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.
கோயில் சிறப்பு :
உக்கிர தெய்வமான இசக்கியம்மன் இங்கு சாந்த கோலத்தில் அமைதியாக காட்சியளிக்கிறாள்.
இடக்கையில் குழந்தையும், வலக்கையில் திரிசூலமும் இருப்பது அவளின் கருணை மற்றும் வீரத்தை வெளிப்படுத்துகிறது.
குழந்தையை கையால் அரவணைத்து காப்பதுபோல, தன்னை நாடி வரும் அன்பர்களை அரவணைத்து அருள்புரிகிறாள். நீதி தெய்வமாக இருந்து தர்மத்தை நிலைநாட்டுவதன் அடையாளமாக தலையில் நெருப்புக்கிரீடம் தாங்கியிருக்கிறாள்.
தமிழ்த்தெய்வமான முருகன், உலகப்பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற குழந்தை இலக்கியங்களை அளித்த தமிழ் மூதாட்டி ஒளவையார் ஆகியோருக்கு இங்கு சந்நிதிகள் இருப்பது சிறப்பம்சம்.
இங்கு வெற்றி விநாயகர், துர்க்கை, மகாவிஷ்ணு, முருகன், தட்சிணாமூர்த்தி, நவகிரக சந்நிதிகளும் உள்ளன.
திருவிழா :
இங்கு தமிழ்மந்திரம் சொல்லி வழிபாடு நடத்தப்படுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். குழந்தைகள், பெண்கள் அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்து வழிபடலாம். ஆடியில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும்.
பிரார்த்தனை :
திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக