இந்த கோவில் எங்கு உள்ளது?
ஆந்திர மாநிலம், ஆதிலாபாத் மாவட்டம், புனித கோதாவரி நதியின் அருகில் ஞான சரஸ்வதி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு எப்படி செல்வது?
நிஜாமாத் நகரிலிருந்து போக்குவரத்து வசதி உள்ளன.
இந்த கோவிலின் சிறப்புகள் என்ன?
நமது நாட்டில் சரஸ்வதி தேவிக்கென அமைந்துள்ள மிக சில கோவில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள கோவில் கருவறையில் ஞான சரஸ்வதி தேவி வீணை, அட்சமாலை, ஏடு தாங்கி அருள்புரிகிறாள். இவள் அருகிலேயே மகாலட்சுமி காட்சி தர, மகா காளி தனி சன்னதியில் ஆலயப் பிரகாரத்தில் வீற்றிருப்பது சிறப்பு.
ஆலயத்தின் முன்புள்ள மூன்று நிலை ராஜகோபுரம் தாண்டி கொடி மரத்தை தரிசித்துவிட்டு உள்ளே நுழையும்போது, அங்கு சூர்யேஸ்வரசுவாமி சிவலிங்க ரூபத்தில் உள்ளார். இந்த லிங்கத்தின்மேல் தினமும் சூரிய கதிர்கள் படுவதாலேயே சூரியன் வழிபடும் சிவபெருமான் என்ற பொருளில் இவருக்கு ஸ்ரீ சூர்யேஸ்வர சுவாமி என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.
சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த ஆலயத்தை சுற்றி எட்டு புனித தீர்த்தங்கள் உள்ளன. அவை இந்திர, சூர்ய, வியாச, வால்மீகி, விஷ்ணு, விநாயக, புத்ர, சிவ தீர்த்தங்களாகும்.
வால்மீகி முனிவர் இத்தலத்து சரஸ்வதி தேவியை வழிபட்ட பின்னரே இராமாயணத்தை எழுத ஆரம்பித்தாராம். ஆலயத்தில் வால்மீகி முனிவரின் சன்னதியும் அருகில் அவரது சமாதியும் உள்ளன.
வேறென்ன சிறப்பு?
இந்த ஆலயத்தில் முப்பெரும் தேவியர் இருப்பினும், இங்கு முக்கியமாக வணங்கப்படுபவள் ஞான சரஸ்வதி தேவியே! இவளை வணங்க கல்வியும், ஞானமும் கைகூடுமென்று பக்தர்கள் நம்புகின்றனர். எப்பொழுதும் மஞ்சள் காப்புடன் இருக்கும் சரஸ்வதி தேவி சிலையில் உள்ள மஞ்சளே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை சிறிதளவு எடுத்து உண்டால் கல்வி கற்கும் திறன் அதிகரிக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
வியாச முனிவருக்கு முதன்முதலில் தேவி முப்பெருந்தேவியரின் அம்சமாக காட்சி கொடுத்து குமராஞ்சலா மலைப்பகுதியில் தேவி ஆவிர்பவித்தபடியால், இந்த ஞான சரஸ்வதி தேவிக்கு கௌமாராச்சல நிவாசினி என்னும் திருநாமமும் உண்டு.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
நவராத்திரி, வசந்த பஞ்சமி, சரஸ்வதி பூஜை, மகா சிவராத்திரி ஆகிய விழாக்கள் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனை செய்யலாம்?
குழந்தைகள் கல்வியை ஆரம்பிக்கும் முன் இங்குள்ள ஞான சரஸ்வதியை வழிபட்டு செல்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
சரஸ்வதிக்கு அபிஷேகம் செய்து வெண் பட்டு உடுத்தி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக