சர்வதேச நாடுகளில் கிரிப்டோகரன்சிகள் மீதான மோகம் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகளிலும் ஆதரவுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. பல பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் கிரிப்டோகரன்சிகளை ஆதரிக்க தொடங்கியுள்ளன.ஆனால் இன்றளவிலும் இந்தியாவில் கிரிப்டோகரன்சிகள் குறித்தான தெளிவான நிலைப்பாடு இல்லை.
இந்திய அரசு இது குறித்து நிபுணர்களிடம் ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படலாம் எனவும், அரசே புதியதாக ஒரு டிஜிட்டல் கரன்சியை வெளியிடலாம் எனவும் தகவல்கள் வெளியானது. எனினும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.
கவலையளிக்கிறது?
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டத்தில், கிரிப்டோகரன்சிகளில் அதிக முதலீடு செய்வது என்பது கவலையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்காக நிபுணர்களுடன் சனிக்கிழமையன்று ஆலோசனையும் நடத்தினார்.
தவறான வழி நடத்தல்
மேலும் கிரிப்டோகரன்சி தொடர்பான வெளிப்படைத் தன்மை இல்லாத விளம்பரங்களில் மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளித்து, தவறான வழி நடத்தும் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும். இப்படி விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக ஒழுங்குமுறை நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியா?
இதுபோன்ற கட்டுப்பாடற்ற டிஜிட்டல் சந்தைகள் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியின் ஆதரமாக மாறுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு பணமோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் மோடி தலைமையிலான இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும் கிரிப்டோகரன்சிகள் என்பது வளர்ந்து வரும் தொழில் நுட்பம் என்பதை அரசு உணர்ந்துள்ளது. இதனை தீவிரமாக கண்கானித்தும் வருகின்றது. ஆக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது முற்போக்கானதாகவும், முன்னோக்கி சிந்திக்கூடியதாகவும் இருக்குமென இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ், கிரிப்டோகரன்சிகள் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரிப்டோகரன்ஸிகள் குறித்து ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு விரைவில் இது குறித்த முழு அறிக்கையை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கிரிப்டோகரன்சியை தடை செய்து ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஆனால் அந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் ரத்து செய்தது. இதற்குப் பிறகு தான் இந்த டிஜிட்டல் பிரச்சனையை தீர்ப்பது குறித்து பரிந்துரைக்க, ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு பிப்ரவரியில் குழு ஒன்றை அமைத்தது. குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் விரைவில் கிரிப்டோகரன்சி குறித்த முக்கிய வரைமுறைகள் வெளியாகலாம் என மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக