Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 27 டிசம்பர், 2021

மஹிந்திரா தயாரிக்கும் 2-கதவு எலக்ட்ரிக் குவாட்ரிசைக்கிள்!! பெங்களூரில் சோதனை ஓட்டம்!

 மஹிந்திரா தயாரிக்கும் 2-கதவு எலக்ட்ரிக் குவாட்ரிசைக்கிள்!! பெங்களூரில் சோதனை ஓட்டம்!
எந்தவொரு மறைப்பும் இல்லாமல் மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் வாகனமான ஆட்டம் (Atom) கார் மீண்டும் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி இனி தொடர்ந்து பார்ப்போம்.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா சார்பில் ஏகப்பட்ட கான்செப்ட் மாடல்களும், புதிய என்ஜின் அமைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஒரு கான்செப்ட் மாடலாக ஆட்டம் என்ற பெயரிலான கார் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதனை கார் என்பதை விட நான்கு சக்கரங்களை கொண்ட எலக்ட்ரிக் குவாட்ரி சைக்கிள் என்றுதான் சொல்ல வேண்டும்.

லாஸ்ட்-மைல் டெலிவிரி சேவைகளை முக்கியமாக கருத்தில் கொண்டு ஆட்டம் மாடலை மஹிந்திரா உருவாக்கி வரும் நிலையில், தற்போது மீண்டும் இந்த குவாட்ரி சைக்கிள் வாகனம் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்கள் சித்தார்த் ரெட்டி என்பவரது டுவிட்டர் பக்கத்தின் மூலமாக நமக்கு கிடைக்க பெற்றுள்ளன.

இந்த ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது, இந்த சோதனை ஓட்டம் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றிருக்கலாம் என தெரிகிறது. ஏனெனில் இந்த ஸ்பை படங்களில், சோதனை வாகனத்தில் கர்நாடகா மாநிலத்திற்கான நம்பர் ப்ளேட் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ட்விட் பெங்களூரில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைவான விலை கொண்ட இவி-யாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதை, இந்த படங்களில் ஆட்டம் குவாட்ரி சைக்கிளின் தோற்றத்தை பார்க்கும்போது தெரிய வருகிறது. அளவில் சிறியதாக, குறுகிய முன்பக்கத்துடன் உள்ளதால், கமர்ஷியல் பயன்பாட்டிற்கு ஏற்ப இந்த எலக்ட்ரிக் வாகனத்தை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் எளிதாக இயக்கி செல்லலாம்.

இந்த வாகனத்தில் பொருத்தப்பட உள்ள எலக்ட்ரிக் ஆற்றல் வழங்கியை மஹிந்திரா நிறுவனமே தயாரிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆட்டம் இவி-யின் அடையாளமே அதன் பெட்டகம் வடிவிலான வடிவம் தான். பயணிகளுக்கு போதிய இடவசதியை வழங்கும் விதத்தில் வாகனத்தை சுற்றிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளதை இந்த ஸ்பை படங்களில் பார்க்க முடிகிறது.

அதிகப்பட்சமாகவே 4 பயணிகள் மட்டுமே அமரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஆட்டம் குவாட்ரிசைக்கிளில் 2 கதவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தின் பின் இருக்கை வரிசையை மட்டுமின்றி, ஓட்டுனருக்கு அருகே உள்ள இருக்கையை கூட மடக்கி கொள்ளலாம். மஹிந்திரா நிறுவனம் இந்த வாகனத்தின் தயாரிப்பு பணிகளை கடந்த 2020ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

மறைப்பு எதுவும் இல்லாமல் காட்சி தந்துள்ளதால் ஆட்டம் இவி-யின் அறிமுகத்தை மிக விரைவில், அடுத்த 2022ஆம் ஆண்டில் எதிர்பார்க்கிறோம். மஹிந்திராவின் இந்த எலக்ட்ரிக் குவாட்ரிசைக்கிளிற்கு பஜாஜ் ஆட்டோவின் குவாட்ரிசைக்கிளான குட் எலக்ட்ரிக் முக்கிய போட்டியாக விளங்கலாம். இந்த பஜாஜ் எலக்ட்ரிக் குவாட்ரிசைக்கிள் வாகனம் தற்சமயம் சோதனைகளில் தான் உள்ளது.

இதனால் இதன் வருகையையும் அடுத்த 2022ஆம் ஆண்டில் எதிர்பார்க்கிறோம். அதேபோல் இவை இரண்டின் விலையையும் கிட்டத்தட்ட ஒரே அளவில் எதிர்பார்க்கிறோம். இதேபோன்று மேலும் சில தயாரிப்பு வாகனங்களை அறிமுகப்படுத்தவும் மஹிந்திரா தயாராகி வருகிறது. இதில் 6-இருக்கை எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் அறிமுகமும் ஒன்றாகும்.

அந்த படத்தில் 6-இருக்கை எக்ஸ்யூவி700 மாடல் இரண்டாவது இருக்கை வரிசையில் இரு கேப்டன் இருக்கைகளை கொண்டிருந்தது. கேப்டன் இருக்கைகள் என்றால், அவற்றிற்கு கை தலையணை, தேவை ஏற்ப மடக்கி வைத்து கொள்ளும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுவது வழக்கம் ஆகும். மேலும் கால்களை நன்கு நீட்டி அமர்ந்து கொள்ளும் வகையில் அதிக லெக்ரூமும் வழங்கப்படும்.

இருப்பினும் 6-இருக்கை மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் அறிமுகப்படுத்தப்படுவதற்கு இன்னும் சில மாதங்களாகலாம் என்கிற நிலைமையே உள்ளது. ஏனெனில் இதுகுறித்த எந்தவொரு அறிவிப்பையும் மஹிந்திரா தற்போது வரையில் வெளியிடவில்லை மற்றும் உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையால் தற்சமயம் மஹிந்திரா பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறது.

சிப்களுக்கான பெரும் தேவையால் எக்ஸ்யூவி700 கார்களை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு சுமார் 19 மாதங்களில் இருந்து 20 மாதங்கள் வரையில் தற்சமயம் உள்ளன. இது நிச்சயமாக புதியதாக எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்ய நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியை தர வாய்ப்பில்லை. இந்த நிலையில் சீராகி மஹிந்திரா கார்களின் தயாரிப்பு பணிகள் வேகமெடுக்க ஆரம்பித்தால், எக்ஸ்யூவி700 காரின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக