நாம் அன்றாடம் பயன்படுத்தும் கார்களில் ஏராளமான பாகங்கள் இருக்கின்றன. இதில். சில பாகங்கள் எதற்காக இருக்கிறது? என்பதை பலரும் உணர்வதில்லை. அப்படிப்பட்ட பாகங்களில் ரிவர்ஸ் லைட்டும் (Reverse Light) ஒன்று. இதற்கு பேக்அப் லைட் (Backup Light) என்ற பெயரும் உள்ளது. ரிவர்ஸ் லைட் எதற்காக பயன்படுகிறது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ரிவர்ஸ் லைட் என்பது கார்களின் பின் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு லைட் ஆகும். கார்களில் ரிவர்ஸ் கியர் போடப்படும்போது ரிவர்ஸ் லைட் எரியும். நீங்கள் வைத்திருப்பது எந்த ரகத்தை சேர்ந்த கார் என்றாலும், எவ்வளவு அதிகமான அல்லது குறைவான விலையில் வாங்கப்பட்டிருந்தாலும் ரிவர்ஸ் லைட் நிச்சயமாக இருக்கும்.
பொதுவாக ரிவர்ஸ் லைட் தேவையில்லை என பலர் நினைக்கின்றனர். அது தவறு. உண்மையில் ரிவர்ஸ் லைட் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. நீங்கள் ரிவர்ஸ் கியரை போடும்போது, ரிவர்ஸ் லைட் 'ஆன்' ஆகி விடும். இதன் மூலம் நீங்கள் ரிவர்ஸில் வர முயற்சி செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு பின்னால் இருக்கும் வாகனங்களுக்கு தெரியும்.
நீங்கள் ரிவர்ஸில் வரப்போகிறீர்கள் என்பதை மற்ற வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் ஒரு சிக்னல்தான் ரிவர்ஸ் லைட். ஹசார்டு லைட்களை (Hazard Lights) போலவே, ரிவர்ஸ் லைட்களும் விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்கு பயன்படுகிறது. நீங்கள் ரிவர்ஸில் வரப்போகிறீர்கள் என்பது உங்களுக்கு பின்னால் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை என வைத்து கொள்வோம்.
அப்படியானால் என்ன நடக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள். நீங்கள் ரிவர்ஸில் வருவது தெரியாமல் உங்களுக்கு பின்னால் இருக்கும் வாகனங்கள் உங்கள் காரை நோக்கி வரும் அல்லவா? அப்போது விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இதை தவிர்க்கும் நோக்கில்தான் கார்களில் ரிவர்ஸ் லைட்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் ரிவர்ஸ் லைட்களின் பயன்பாடு இத்துடன் முடிந்து விடுவதில்லை. ரிவர்ஸ் லைட்களால் இன்னும் ஒரு முக்கியமான நன்மை இருக்கிறது. நீங்கள் காரை ரிவர்ஸில் எடுக்கும்போது, நன்கு வெளிச்சமான சூழல் தேவை. அப்போது எவ்வளவு தூரம் ரிவர்ஸ் எடுக்கலாம் மற்றும் எந்த கோணத்தில் ரிவர்ஸ் எடுக்கலாம் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியும்.
வெளிச்சம் இல்லாவிட்டால் சிரமம்தான். இருட்டாக இருக்கும் இடங்களில் வெளிச்சம் இல்லாமல் நீங்கள் ரிவர்ஸில் எடுத்தால், கார் எங்கேயாவது மோதி விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இதுபோன்ற சமயங்களில் ரிவர்ஸ் லைட்கள் உங்களுக்கு போதுமான வெளிச்சத்தை வழங்குகின்றன. இதன் மூலம் நீங்கள் காரை பாதுகாப்பாக ரிவர்ஸில் எடுக்க முடியும்.
அத்துடன் இன்றைய அதிநவீன கார்களில் ரிவர்ஸ் கேமராக்கள் வழங்கப்படுகின்றன. ரிவர்ஸ் லைட்கள் மூலம் போதுமான வெளிச்சம் கிடைப்பதால், இந்த கேமராக்களும் நல்ல வியூ-வை வழங்கும். எனவே கார்களின் பாதுகாப்பு என எடுத்து கொண்டால், ரிவர்ஸ் லைட்கள் உண்மையிலேயே மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருக்கின்றன.
எனவே உங்கள் காரின் ஹசார்டு லைட்கள், ஹெட்லைட்கள் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்களை போல், ரிவர்ஸ் லைட்களையும் எப்போதுமே நன்கு வேலை செய்யும் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் விபத்து அச்சம் இல்லாமல் நீங்கள் காரை ரிவர்ஸில் எடுக்கலாம். நல்ல வெளிச்சத்துடன் காரை ரிவர்ஸில் எடுப்பதற்கும் இது பயன்படும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக