
இந்த கோயில் எங்கு உள்ளது?
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இராசிபுரம் என்னுமிடத்தில் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
நாமக்கல்லில் இருந்து இராசிபுரம் செல்ல பேருந்து வசதி உள்ளது. இராசிபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். இவரது திருமேனியில் அம்புப்பட்ட தழும்பு காணப்படுகின்றது.
இத்தலத்தில் முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாகவும், வள்ளி, தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியராகவும் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கிறார். இவ்வாறு ஒரே சமயத்தில் முருகனின் இரண்டு கோலங்களையும் இங்கு தரிசிக்கலாம்.
இத்திருக்கோயிலில் அம்பாள் அறம்வளர்த்தநாயகி தனிச்சன்னதியில் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். இவரது சன்னதியில் பௌர்ணமியன்று காலையில் விசேஷ ஹோமம் நடைபெறும்.
63 நாயன்மார்களுக்கும் குருபூஜை செய்கின்றனர். இத்தலத்தில் நாகர் சன்னதியும் அமைந்துள்ளது.
வேறென்ன சிறப்பு?
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் சிவன் கோஷ்டத்தில் சிவதுர்க்கை காட்சியளிக்கிறார். ஆடி கடைசி வெள்ளியின்போது இவருக்கு சங்காபிஷேகம் செய்யப்படுவது சிறப்பு.
கோபுரத்திற்கு கீழே உள்ள விநாயகர், எதிரே நந்தியுடன் காட்சியளிக்கிறார். இவரை வணங்கிவிட்டே கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது?
சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் நடைபெறும்.
ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம், விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை தீபம் போன்ற தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
கலைகளில் சிறந்து விளங்க இத்தலத்தில் வேண்டிக் கொள்ளலாம்.
நாக தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் நாகருக்கு மஞ்சள் பூ, சர்க்கரைப் பொங்கல் படைத்து, பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் வளர்பிறை பிரதோஷத்தின்போது உச்சிக்காலத்தில் அரிசி, தேங்காய், பழம் மற்றும் உப்பில்லாத சாதத்தை அம்பிகையிடம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக