
பழைமையான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் (BSA Motorcycles) அதன் மறு வருகையை உறுதிப்படுத்தும் வகையில் கோல்ட்ஸ்டார் 650 (Goldstar 650) எனும் புதுமுக பைக்கை தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள், பைக் பற்றிய சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பழம்பெரும் மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனமான பிஎஸ்ஏ மீண்டும் இருசக்கர வாகன உற்பத்தியில் களமிறங்க இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த தகவலை ஏற்கனவே நிறுவனம் சமூக வலைதளம் வாயிலாக உறுதிப்படுத்திவிட்டது. தற்போது இந்த அறிவிப்பே நிஜமாகியிருக்கின்றது.
நிறுவனம், அதன் மறு வருகையை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் புதுமுக மோட்டார்சைக்கிளை வெளியீடு செய்திருக்கின்றது. பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் ரசிக பட்டாளம் தென்படுகின்றது. பலர் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே நிறுவனம் அதன் மறு வருகையை இந்த உலகில் பதிவு செய்திருக்கின்றது. இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் பகுதியில் நடைபெற்று வரும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் மோட்டார்சைக்கிளை பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் காட்சிப்படுத்தியுள்ளது.
பிஎஸ்ஏ கோல்ட்ஸ்டார் 650 (BSA Goldstar 650) எனும் மோட்டார்சைக்கிள் மாடலையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இந்த பைக்கை வரும் 12ம் தேதி வரை அங்கு காட்சிப்படுத்த தயாரிப்பாளர் திட்டமிட்டிருக்கின்றார். 650 சிசி திறன் கொண்ட ராயல் என்பீல்டு தயாரிப்புகளுக்கு போட்டியளிக்கும் வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
ஒற்றை சிலிண்டர் வசதிக் கொண்ட 650சிசி எஞ்ஜினே பிஎஸ்ஏ கோல்ட்ஸ்டார் 650 மோட்டார்சைக்கிளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 47 எச்பி பவர் மற்றும் 40 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இது ஓர் லிக்யூடு கூல்டு எஞ்ஜின் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பு அம்சங்கள் இந்த பைக்கில் பிஎஸ்ஏ வழங்கியிருக்கின்றது. நவீன கால இளைஞர்களைக் குறிவைக்கும் கிளாசிக் தோற்றம் கொண்ட நவீன கால பைக்காக கோல்ஸ்டார் 650 உருவாக்கப்பட்டுள்ளது. குறைவான மாசை உமிழும் தொழில்நுட்பம், டிஸ்க் பிரேக் மற்றும் இரட்டை சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.
தொடர்ந்து, வட்ட வடிவ ஹெட்லேம்ப், டிஆர்எல் மின் விளக்குகளுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், எல்இடி வால் பகுதி மின் விளக்கு, கண்ணீர் துளி வடிவத்திலான எரிபொருள் தொட்டி மற்றும் அகலமான ஹேண்டில் பார் உள்ளிட்டவை பைக்கை மேலும் அலங்கரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இவற்றுடன், பெரிய அளவிலான ஃபெண்டர், ஸ்போர்ட்டி லுக்கிலான ஸ்போக் வீல்கள், பைரல்லி டயர்கள் உள்ளிட்ட கவர்ச்சிகர அம்சங்களும் பிஎஸ்ஏ கோல்ஸ்டார் 650 பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் கவர்ச்சியை கூடுதலாக்கும் வண்ணம் குரோம் பூச்சு பல்வேறு பாகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ப்யூவல் டேங்க், எக்சாஸ்ட், மட்குவார்ட், எஞ்ஜின் பகுதி உள்ளிட்டவை குரோம் பூச்சுடன் காணப்படுவது பைக்கின் மீது காதலை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றது.
இத்தகைய சிறப்பு வசதிகளுடனேயே பிஎஸ்ஏ-வின் கோல்ட்ஸ்டார் 650 உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த பைக் இந்திய சந்தையை அடைவதற்கான பல்வேறு சாத்தியக் கூறுகள் நிலவுகின்றன. பிஎஸ்ஏ ஓர் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பிராண்டாகும். இந்நிறுவனம், அதாவது, கிளாசிக் லெஜண்ட்ஸ் மஹிந்திரா குழுமத்திற்கு சொந்தமானதாகும்.

இதுமட்டுமின்றி, ஏற்கனவே பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்கள் இந்திய சாலைகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பிஎஸ்ஏ-வின் இந்த புதிய மோட்டார்சைக்கிள்கள் நிச்சயம் இந்தியாவில் கால் தடம் பதிக்கும் என நம்பப்படுகின்றது. ஆகையால், இதன் வருகையை எதிர்நோக்கி கிளாசிக் ரக வாகன பிரியர்கள் காத்திருக்க தொடங்கியிருக்கின்றனர். அதேநேரத்தில் இந்த நிறுவனத்தின் மறு வருகை தற்போது கிளாசிக் ரக வாகன தயாரிப்பாளர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக