பழைய காரை ஸ்கிராப் செய்யும் திட்டம் உங்களுக்கு இருக்கா?, இதோ நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
காற்று மாசுபாட்டில் அதிக பங்கினை வகிக்கும் பழைய வாகனங்களை ஒழிக்கும் முயற்சிகள் நாட்டில் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக, டெல்லி போன்ற மக்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் மிகக் கடுமையான நடவடிக்கைகள் பழையா வாகனங்கள் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்களின் பயன்பாட்டிற்கு தலைநகர் டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாசு கட்டுப்பாடு சான்று உடனேயே அனைத்து பழைய வாகனங்களும் இயங்க வேண்டும், அதிக மாசை ஏற்படுத்தக் கூடிய வாகனமாக இருந்தால் அவற்றை தாமாக முன் வந்து உடனடியாக ஸ்கிராப் செய்ய வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதேமாதிரியான நடவடிக்கைகளிலேயே நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் களமிறங்கியிருக்கின்றன. மேலும், தாமாக முன் வந்து ஸ்கிராப் செய்வோருக்கு புதிய வாகனங்களை வாங்கும் போது வரி சலுகை வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. தாமாக முன் வந்து பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆகையால், பலர் தங்களின் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இந்த முடிவை எடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியதகவலையே இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.
எப்போது உங்கள் காரை ஸ்கிராப் செய்ய பரிசீலிக்க வேண்டும்:
நீங்கள் பயன்படுத்தி வரும் கார் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்தால் அதனை ஸ்கிராப் செய்ய திட்டமிடலாம். இதேபோல், நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத மற்றும் அதேநேரத்தில் இனி இந்த கார் வேலையே செய்யாது என்ற நிலையில் இருக்கும் வாகனமாக இருந்தாலும் அவற்றை ஸ்கிராப்பிற்கு அகற்றலாம்.
பதிவு சான்றிதழ் புதுப்பிக்கப்படாமல் காலாவதியாகி, ஆர்டிஓ ஆர்சி அல்லது ஃபிட்னஸ் சான்றிதழை ரத்து செய்திருந்தால், அத்தகைய வாகனத்தையும் ஸ்கிராப் செய்ய பரிசீலிக்கலாம். குறிப்பாக, 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனம் அல்லது 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்கள் மிக அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் வகையில் இருக்குமானால் அதனை ஸ்கிராப் செய்ய பரிந்துரைக்கலாம்.
காரை எங்கே ஸ்கிராப் செய்யலாம்?
அரசு தற்போது பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. அத்தகைய ஸ்கிராப் யார்டுகளை அணுகுவது சிறந்தது. இதன் மூலம் ஸ்கிராப் செய்வதனால் எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க மற்றும் அரசின் சிறப்பு சலுகைகளை எளிதில் பெற்றுக் கொள்ள முடியும். அங்கீகரிக்கப்பட்ட ஸ்கிராப் யார்டுகள் பற்றிய தகவல் ஆர்டிஓ அலுவலகம் மற்றும் போக்குவரத்துத்துறை சார்ந்த தளங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
ஸ்கிராப் செய்யும்போது என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்ய அந்த வாகனத்தின் உரிமையாளர் சில ஆவணங்களை வழங்க வேண்டி இருக்கின்றது. வாகனத்தின் சான்றிதழ், வாகனம் பயன்பாட்டிற்கு தகுதியற்றது என உறுதிப்படுத்தக் கூடிய சான்றிதழ், பான் கார்டு, காரை ஸ்கிராப் செய்வதற்கான உரிமையாளரின் ஒப்புதல் கடிதம், வாகனத்தின் உண்மையான உரிமையாளர் இறந்திருந்தால் அவருடைய இறப்பு சான்றிதழ் அல்லது தற்போதைய உரிமையாளரின் வாரிசு சான்றிதழ் ஆகிய ஆவணங்களை வழங்க வேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை என்பது குறிப்பிடத்தகுந்தது.
வாகனத்தை ஸ்கிராப் செய்வதனால் என்ன பலன் கிடைக்கும்?
பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்வதனால் ஏதேனும் பலன் கிடைக்குமா? என்கிற கேள்வி நம்மில் பலருக்கு தோன்றக் கூடும். ஆம், பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்வதனால் குறிப்பிட்ட அளவு தொகை அதன் உரிமையாளருக்கு கிடைக்கும். அன்றைய நாளின் பழைய இரும்பு விலைக்கு ஏற்ப தொகை வழங்கப்படும்.
கிலோ ரூ. 15 வரை வழங்கப்பட வாய்ப்பு உண்டு. ஒரு வேலை காரில் இருக்கும் சில பாகங்கள் இயங்கும் தன்மை உடன் இருந்தால் அதற்கு தனியாக மதிப்பு வழங்கப்படும் என கூறப்படுகின்றது. ஆகையால், பழைய காரை ஸ்கிராப் செய்யும்போது கணிசமான வருவாயை நம்மால் ஈட்டிக்கொள்ள முடியும்.
இதுதவிர, சில பிரத்யேக சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதாவது, பழையா வாகனத்தை ஸ்கிராப் செய்த பின்னர், ஸ்கிராப் யார்டு ஓன்று சான்றினை வழங்கும். அந்த சான்றை புதிய வாகனத்தை வாங்கும் போது காண்பித்தால் குறிப்பிட்ட சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
காரை ஸ்கிராப் செய்த பின்னர் என்ன செய்ய வேண்டும்?
முன்னதாக ஓர் வாகனம் ஸ்கிராப் செய்யப்பட்ட பின்னர், அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு சேஸ் எண் மற்றும் காரை ஸ்கிராப் செய்யும் போது எடுக்கப்பட்ட படங்களை வழங்க வேண்டும் என்று அரசு கூறியது. இந்த ஆவணங்களை ஆர்டிஓ-விடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கும்போதே அரசிடம் இருந்து வாகனத்தை ஸ்கிராப் செய்ததற்கான சான்று கிடைக்கும்.
இந்த சிக்கலான விதிகளை அரசு தற்போது மாற்றி அமைத்துள்ளது. திருத்தப்பட்ட விதியானது, வாகன ஸ்கிராப் யார்டு, வாகனத்தின் உரிமையாளர்களுக்கு சேஸ் எண்ணை வழங்காது. மாறாக, அது ஸ்கிராப் செய்யப்பட்டதற்கான சான்றிதழை வாஹன் தளத்தில் அப்லோட் செய்துவிடும்.
மேலும், ஆர்டிஓ தரவு தளத்தில் வாகனத்தின் பதிவை நீக்கிவிடும். மறு விற்பனை மற்றும் பதிவெண்ணை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். ஆகையால், ஸ்கிராப் சான்று மற்றும் பதிவு நீக்கப்பட்ட சான்று இரண்டையும் நாம் வாஹன் தளத்தில் இருந்து கடைசியாக டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக