Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 10 பிப்ரவரி, 2022

ரூ.1500 கோடி சம்பளமா.. சன் டிவி கலாநிதி மாறன், காவேரி கலாநிதி சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு..!

  வருடாந்திர பொதுக் கூட்டம்

தென் இந்தியாவில் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி குழுமத்தின் ப்ரோமோட்டர்களாக இருக்கும் கலாநிதி மாறன் மற்றும் அவருடைய மனைவியான காவேரி கலாநிதி ஆகியோர் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நிறுவனத் தலைவர்களாக உள்ளனர்.

 இந்நிலையில் தற்போது கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி ஆகியோரை மீண்டும் சம்பள உயர்வுடன், உயர் நிர்வாகப் பதவியில் உட்கார வைக்க முடியாது என்று சன் டிவி பங்கு முதலீட்டாளர்கள் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சன் டிவி

சன் டிவி குழுமத்தின் உயர் நிர்வாகப் பதவிகளில் இருக்கும் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி ஆகிய இருவரும் கடந்த 10 வருடத்தில் அதாவது 2012 நிதியாண்டு முதல் 2021 நிதியாண்டு வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 1500 கோடி ரூபாய் தொகையை நிர்வாக ஊதியமாகப் பெற்றுள்ளனர். இதில் சம்பளம், கொடுப்பனவு, போனஸ் என அனைத்தும் அடங்கும்.

கலாநிதி மாறன்

2021ஆம் நிதியாண்டில் சன் டிவி குரூப்-ன் நிர்வாகத் தலைவராக (Executive Chairman) இருக்கும் கலாநிதி மாறன் 87.50 கோடி ரூபாய் சம்பளமும், நிர்வாக இயக்குனராக (Executive Director) இருக்கும் காவேரி கலாநிதி கிட்டதட்ட இதே 87.50 கோடி ரூபாய் சம்பளத்தைப் பெற்றுள்ளார்.

காவ்யா கலாநிதி மாறன்

மேலும் கலாநிதி மாறனின் மகளான காவ்யா கலாநிதி மாறன் ஏப்ரல் 1, 2019 முதல் இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காவ்யா கலாநிதி மாறன் வருடத்திற்கு 1.09 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகிறார்.

1,470 கோடி ரூபாய்

இப்படிக் கடந்த 10 வருடத்தில் மாறன் குடும்பத்தைச் சேர்ந்த கலாநிதி மாறன், காவேரி கலாநிதி, காவியா கலாநிதி மாறன் ஆகியோர் இணைந்து சுமார் 1,470 கோடி ரூபாய் தொகையைச் சம்பளமாக இக்குழுமத்தில் இருந்து பெற்றுள்ளனர்.

பிற நிறுவனத் தலைவர்கள் சம்பளம்

இதேவேளையில் 2021ஆம் நிதியாண்டில் L&T குழுமத்தின் எஸ்என் சுப்ரமணியன் 28.50 கோடி ரூபாயும், டெக் மஹிந்திரா சிபி குர்னானி 22 கோடி ரூபாயும், இன்ஃபோசிஸ் சிஇஓ சலில் பரேக் 49 கோடி ரூபாயும், டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநந்தன் 20 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி கொரோனா காரணமாக எவ்விதமான சம்பளமும் பெறாத நிலையில் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி அதிகப்படியான சம்பளத்தைப் பெற்று வருகின்றனர்.

வருடாந்திர பொதுக் கூட்டம்

கடந்த வாரம் சன் டிவி குரூப்-ன் வருடாந்திர பொதுக் கூட்டம் நடந்தது, இக்கூட்டத்தில் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி ஆகியோருக்கு 25 சதவீதம் சம்பள உயர்வுடன் 5 வருட பணி கால நீட்டிப்புத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

நிறுவன முதலீட்டாளர்கள் எதிர்ப்பு

இந்த முடிவிற்கு நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் இருக்கும் 86.3 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாறன் குடும்பத்தினர் இந்நிறுவனத்தில் சுமார் 75 சதவீத பங்குகளை வைத்துள்ள நிலையிலும், நிறுவன முதலீட்டாளர்கள் வெறும் 12 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ள நிலையில் எதிர்ப்புத் தெரிவித்தது எடுபடாமல் போனது.

25 சதவீத சம்பளம் உயர்வு

இதன் மூலம் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி ஆகியோரின் சம்பளம் 25 சதவீத உயர்வுடன் 5 வருட பணிக்காலமும் நீட்டிக்க நிர்வாகக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 2012ஆம் நிதியாண்டில் 57.01 கோடி ரூபாயாக இருந்த கலாநிதி மாறன் சம்பளம் தற்போது 87.50 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக