இந்த கோயில் எங்கு உள்ளது?
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருத்த;ர் என்னும் ஊரில் அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கடலூரில் இருந்து சுமார் 24 கி.மீ தூரத்தில் பண்ருட்டி அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. பண்ருட்டியில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டும் பேருந்துகள் செல்கின்றன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
சித்திரை மாதம் முதல் வாரத்தில் மாலை வேளையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 226வது தேவாரத்தலம் ஆகும்.
மேற்கு நோக்கி ஸத்யோஜாத மூர்த்தியாக சிவபெருமானும் (அனுக்ரஹ மூர்த்தி), வடக்கு நோக்கி ஞானசக்தி ஸ்வரூபியாக சிவலோக நாயகியும், தெற்கு நோக்கி வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமானும் காட்சியளிக்கின்றனர்.
கோயிலை வலம் வருகையில் விஷ்ணு துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோரையும் தரிசிக்கலாம்.
வேறென்ன சிறப்பு?
இக்கோயிலில் பிரதோஷத்தன்று நந்திக்கு பூஜைகள் செய்யப்படும்போது, அருகில் நந்திக்கொடி கட்டுகின்றனர்.
இங்கு முருகன் ஆறு முகங்களுடன் சுப்பிரமணியராக இருக்கிறார். இவருக்கு அருகில் ஆதிகேசவர் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார்.
அம்பாள் வாமதேவ முகமாக (வடக்கு பார்த்து) தனிச்சன்னதியில் இருக்கிறாள். அம்பாளை இக்கோலத்தில் காண்பது அபூர்வம்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
வைகாசி விசாகத்தில் 10 நாள் பிரம்மோற்சவம், கந்தசஷ்டி, சிவராத்திரி, அன்னாபிஷேகம் போன்றவை கொண்டாடப்படுகின்றனர்.
சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், பௌர்ணமி, தமிழ் வருடப்பிறப்பு, ஆருத்ரா தரிசனம், தை மாதம் ஐந்தாம் நாள் ஆற்றுத் திருநாள் மற்றும் பல உற்சவங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
பௌர்ணமி மற்றும் திங்கட்கிழமைதோறும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் நெய்விளக்கு ஏற்றி, வில்வ இலை அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
குருதலம் என்பதால் இங்கு சிவன், தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதனால் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயில் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையன்று மஞ்சள் வஸ்திரம், மஞ்சள் புஷ்பம், கொண்டைக் கடலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக