இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக திகழும் தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், ஹூண்டாய் நிறுவனத்தை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என குரல் எழுப்பப்படும் நிலையில், அந்நிறுவனம் சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறது.
உலகம் முழுவதும் வாகனங்களை விற்பனை செய்து வரும் தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் மாருதி நிறுவனத்துக்கு அடுத்ததாக நம்பர்-2 இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் பாகிஸ்தானிலும் தனது கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் வகையிலும், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது.
சர்ச்சை பதிவு |
சர்ச்சை பின்னணி:
காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத்திற்கான ஆதரவு தரும் விதமாக பாகிஸ்தானில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5ம் தேதி ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ ஆக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5ம் தேதியன்று, ஹூண்டாய் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில், “காஷ்மீரி சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம். அவர்கள் தொடர்ந்து வரும் சுதந்திர போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட இந்த பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட ஹூண்டாய் நிறுவன கார்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டுமென கோரி #BoycottHyundai என்ற ஹேஷ்டேக் சர்வதேச அளவில் ட்ரெண்டாகி தற்போது தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
ஹூண்டாய் நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என கண்டனக் குரல்கள் வலுத்த நிலையில், தற்போது அந்நிறுவனம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Official Statement from Hyundai Motor India Ltd.#Hyundai #HyundaiIndia pic.twitter.com/dDsdFXbaOd
— Hyundai India (@HyundaiIndia) February 6, 2022
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் தேசியவாதத்தை நாங்கள் மதிக்கிறோம். ஹூண்டாய் இந்தியாவுக்கு தொடர்பில்லாத அந்த பதிவு, இந்த மகத்தான நாட்டிற்கான எமது ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு மற்றும் சேவையை புண்படுத்துகிறது.
இந்தியா ஹூண்டாய் பிராண்டின் இரண்டாவது தாயகமாகும், மேலும் இது போன்ற விஷயங்களில் நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளோம், மேலும் இதுபோன்ற எந்தவொரு கருத்தையும் நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்தியா மற்றும் இந்திய மக்களுக்கான முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்” இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் விளக்கம் அளித்தபோதிலும், அந்நிறுவனம் மன்னிப்பு கோரும் வரை ஹூண்டாய் நிறுவனத்தை புறக்கணிப்போம் என குரல்கள் எழுந்துள்ளன. மேலும் இந்திய தயாரிப்புகளை இந்தியர்கள் வாங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக