டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை பதிவு செய்யும்போது கோளாறுகள் ஏற்படுவதாகவும், இதனால் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்களை சந்திப்பதாகவும் தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது.
இதில்,குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ம் தேதி நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன.
தகுதி:
பட்டப்படிப்பு முடித்தவர்கள் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவிகள்:
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனி பிரிவு உதவியாளர், நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், முழு நேர விடுதி காப்பாளர், முழுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், வருவாய் உதவியாளர், கைத்தறி ஆய்வாளர் போன்ற பதவியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.
அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கியது. இம்மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (23ம் தேதி) கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை பதிவு செய்யும்போது கோளாறுகள் ஏற்படுவதாகவும், இதனால் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்களை சந்திப்பதாகவும் தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாக இருக்கும் நிலையில், இந்த கோளாறு தேர்வர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக