கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகத்தை ஆட்டிப்படைத்தது. இதனால் அனைத்து நிச்சயமற்ற தன்மையையும், நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியுள்ளது.
உடல் ஆரோக்கியத்துடன், நமது நிதி ஆரோக்கியமும் நிலையாக இருப்பது அவசியமாகும். பெற்றோர்களாகிய நாம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம் அமைய வேண்டும் என்றும், அவர்கள் வாழ்க்கையில் சிறப்பாகச் செயல்படுவதற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்றும் நினைப்பீர்கள்.
அப்படியானால் உங்கள் குழந்தைகளுக்கு பணத்தை சேமிப்பது எப்படி என்பது குறித்து எடுத்துரைக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது பணப்புழக்கம் பற்றி அறிந்து கொள்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், இந்த இளம் வயதிலேயே குழந்தையின் மனம் அனைத்தையும் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும், எனவே சில விளையாட்டு பொருட்களை வாங்கிக் குவிப்பதா.? அல்லது பணத்தை பயனுள்ள விதத்தில் சேமிப்பது சிறந்ததா.? என உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்..
டிஜிட்டல் மயமான இக்காலத்தில் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் அல்லது ஆன்லைன் பேமெண்ட் போன்ற விதிமுறைகளை குழந்தைகள் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள்.
இருப்பினும், முழுமையாக அதனைப் பற்றி அறிந்து கொள்ளாமல் பிள்ளைகளால் நிதி மேலாண்மை பற்றிய அறிவை முழுமையாக பெற முடியாது. சிறுவயதிலிருந்தே உங்கள் குழந்தைகளுக்கு நிதி மேலாண்மை, சேமிப்பு பற்றி எவ்வாறு கற்றுக் கொடுக்கலாம் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பிள்ளைகளுக்கு உதாரணமாக இருங்கள்:
நீங்கள் குழந்தைகளின் முன்னால் பொருட்களை வாங்கிக் குவிக்கும் போது, அவர்கள் மட்டும் குறைவாக வாங்க வேண்டும் என நீங்கள் நினைக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் உணர்ந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் தான் அவர்களுடைய ரோல் மாடல். அவர்கள் உங்கள் ஒவ்வொரு அசைவையும் பார்க்கிறார்கள், நீங்கள் சொல்வதைக் கேட்கிறார்கள், நீங்கள் செய்வதைப் பார்க்கிறார்கள்.
பொருட்களுக்கான தொகையை செலுத்தும் போதோ அல்லது நீங்கள் வேலைக்குச் செல்வது பற்றியோ பிள்ளைகள் கேள்விகளைக் கேட்கும்போது, அத்தகைய விஷயங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி வெளிப்படையாக பேசுங்கள். நீங்கள் எப்படி பணம் சம்பாதிப்பீர்கள், ஏன் சேமிப்பது முக்கியமானது, எதையாவது வாங்குவது பற்றி எப்படி புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பது என்று அவர்களிடம் பேசுங்கள்.
நீங்கள் வீட்டில் மூன்று ஜாடிகளையும் வைக்கலாம், ஒன்றில் செலவு செய்வதற்கும், இரண்டாவதில் சேமிப்பதற்கும், கடைசி ஜாடியில் தானம் செய்வதற்கும் என குறிப்பிட்டு வைத்து, குழந்தைகளை அதில் பணத்தை சேமிக்க சொல்லலாம். இது திருப்பிக் கொடுப்பதன் மதிப்பை அவர்களுக்குக் கற்பிப்பது மட்டுமல்லாமல், பணத்தை திறமையாக நிர்வகிக்க செய்யவும் உதவும்.
பிள்ளைகள் சொந்தமாக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள்:
பணத்தை செலவழிப்பதை விட அதனை சம்பாதிப்பது எவ்வளவு கடினமானது என்பதை குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். அதனை வாய்மொழியாக அல்லாமல், செயல்முறையில் அவர்களே புரிந்து கொள்ள பணத்தை தானே சம்பாதிப்பதற்கான அல்லது சேமிப்பதற்கான வழிகளை குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுங்கள். பாக்கெட் மணி வேண்டும் என்றால் வீட்டில் ஏதாவது வேலைகளை ஒதுக்கி அதை செய்ய வைக்கலாம், இதன் மூலம் வேலை செய்தால் தான் பணம் கிடைக்கும் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.
குடும்ப பட்ஜெட்டில் குழந்தைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்:
நடுத்தர குடும்பத்தினர் பட்ஜெட் போட்டு தான் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். அப்படி மாத பட்ஜெட் போடும் போது குழந்தைகளையும் அதில் ஈடுபடுத்துங்கள். இதில் பெரும்பாலானவற்றைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நீங்கள் நினைக்கும் அதே வேளையில், அவர்கள் தங்களது செலவுகளைக் குறைக்க இந்த விஷயம் எவ்வாறு உதவும் என்பதைப் பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். மின்விசிறிகள் / கணினிகளை அணைப்பதன் மூலம் மின்சாரத்தைச் சேமிப்பதில் இருந்து, விளையாடாமல் இருப்பதைக் கற்றுக்கொள்வது வரை, குழந்தைகள் எதிர்காலத்தில் பெரிய முதலீடுகளைச் செய்யத் தயாராக இருப்பார்கள்.
சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவியுங்கள்:
உங்கள் குழந்தைகள் நீங்கள் பொருட்களை வாங்குவதைப் பார்க்கிறார்கள், அவர்களுக்கான பொருட்கள் உட்பட. எனவே, அது செலவுக்காக மட்டும் அல்ல என்பதை அவர்களுக்குக் கற்பிப்பது மிகவும் அவசியம். எளிமையான இலக்குகளை நிர்ணயம் செய்து, அதன் மூலம் அவர்களை சேமிக்க ஊக்குவிக்கலாம். இது குறுகிய கால இலக்குகளை நிர்ணயிப்பதில் அவர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் பணத்தை நியாயமான முறையில் நிர்வகிக்கவும் உதவும்.
தேவை, விருப்பத்திற்கு இடையிலான வித்தியாசம்:
குழந்தைகளுக்கு தேவை மற்றும் விருப்பத்திற்கு இடையிலான வித்தியாசத்தை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். ஒரு லிஸ்ட்டை உருவாக்கி, பொருட்கள் மற்றும் அவை ஏன் தேவைப்படுகின்றன அல்லது விரும்புகின்றன என்பதை வேறுபடுத்திப் பார்க்க அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் இதைச் செய்யலாம். படிப்படியாக, அவர்கள் வகைப்படுத்தலையும் அதன் அவசியத்தையும் புரிந்துகொள்வார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக