ஒரு புதிய ஆராய்ச்சியின் படி, இளைஞர்கள் தங்கள் ப்ரொஃபெஷனல் கேரியர் என்று வரும்போது தங்களது அப்பா, தாத்தா காலத்தில் இருந்த முன்னுரிமைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பொருட்படுத்துவதே இல்லை. மாறாக அவர்கள் தத்தம் தனிப்பட்ட வாழ்க்கையை சுற்றிய முன்னுரிமைகள் மற்றும் எதிர்பார்ப்புகளையே கொண்டுள்ளனர்.
என்ன டாப்பிக் என்று இன்னும் சரியாக புரியவில்லையா? இப்போது புரியும் பாருங்கள் - இந்த தலைமுறை இளைஞர்கள் பிடிக்காத ஒரு வேலையை செய்வதை விட வேலையில்லாமல் இருப்பதையே அதிகம் விரும்புகிறார்களாம்.
அதாவது நமது அப்பா, தாத்தா காலத்தில் இருந்தது போல குடும்பம் மற்றும் சூழ்நிலை காரணமாக "கிடைச்ச வேலையை பிடிச்ச வேலையா மாத்திக்கணும்!" என்கிற டயலாக்குகளை மதிப்பதே இல்லையாம்! - இதை நாங்கள் சொல்லவில்லை, இதுதொடர்பான ஒரு ஆய்வை நடத்தி, அதன் முடிவை அடிப்படையாக வைத்து ஆராய்ச்சியாளர்களே கூறியுள்ளனர்.
ராண்ட்ஸ்டாட் வேலைவாய்ப்பு நிறுவனம், 34 நாடுகளைச் சேர்ந்த 35,000 பேரிடம் அவர்கள் வேலை செய்யும் உலகத்தைப் பற்றிய அவர்களின் பார்வையை கேட்டறிந்தது. அதில் 18 முதல் 35 வயதுடையவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வேலை தேடிக்கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வேலையின்மை என்கிற ஆபத்தான சூழ்நிலையிலும் கூடம் அவர்கள் ஒரு வேலையின் விளைவாக தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை சமரசம் செய்ய தயாராக இல்லை.
இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், 1997 மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்களான ஜென் இசட் (Gen Z) பிரிவை சேர்ந்தவர்களில் 40% பேர் மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இளமைப் பருவத்தை அடைந்தவர்களான மில்லியனல்ஸ் (Millennials) பிரிவை சேர்ந்த 38% பேர், ஒரு மகிழ்ச்சியற்ற வேலையில் சிக்கிக் கொள்வதை விட வேலையில்லாமல் இருப்பதையே அதிகம் விரும்புவதாக தெரிவித்து உள்ளனர்.
ஒப்பிடுகையில், பேபி பூமர்களில் (Baby Boomers) 25% மட்டுமே இதை செய்ய தயாராக இருப்பதாக கூறுகிறார்கள். இங்கே 'பேபி பூமர்ஸ்' என்றால் ஓய்வு பெறும் வயதை எட்டியவர்களை குறிக்கும் ஒரு வார்த்தை ஆகும்.
ஆகமொத்தம், முந்தைய தலைமுறைகளை போலல்லாமல், தற்கால இளைஞர்கள் நிரந்தர வேலை, கைநிறைய சம்பளம், லைஃப் செட்டில் போன்ற வார்த்தைகளுக்கு மயங்குவதில்லை. அவர்கள் ஆர்வமுள்ள ஒரு தொழிலில் / வேலையில் பணியாற்றவே விரும்புகிறார்கள், ஏனெனில் இப்படி செய்வதால் அவர்களால் தொடர்ந்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.
மேற்கண்ட காரணங்களுக்காக மட்டுமின்றி, ஏறக்குறைய 50% ஜென் இசட்ஸ் மற்றும் மில்லியனல்ஸ், சமூக நீதி மற்றும் புவி வெப்பமடைதலுக்கு எதிரான நிறுவனத்தில் வேலை செய்யவும் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இந்த விஷயத்தில் பேபி பூமர்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஜென் இசட்ஸ் மற்றும் மில்லியனல்ஸ் உடன் ஒற்றுப்போகின்றனர்.
மேலும் 18 முதல் 35 வயதை எட்டிய பெரும்பாலானோர்கள், பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தை வளர்ப்பதற்கு எதிராக செயல்படும் நிறுவனத்தில் சேர மாட்டாம் என்றும் கூறியுள்ளனர்.
ஒரு வேலைக்கான, ஜென் இசட்ஸ் மற்றும் மில்லினியல்ஸின் முன்னுரிமைகள் அவர்களின் "சீனியர்களை" ஆச்சரியப்படுத்துவது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் "இதெல்லாம்" தாங்கள் வேலை செய்யும் உலகத்தை அவர்கள் எவ்வாறு மறுவரையறை செய்ய விரும்புகிறார்கள் என்கிற அவர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்றே கூற வேண்டும்.
இந்த ஆய்வில், ஐந்தில் இரு இளைஞர்கள் தாங்கள் செய்யும் வேலை இந்த உலகிற்கு ஒரு நேர்மறையான பங்களிப்பை வழங்கும் என்றால் குறைவான சம்பளத்தை பொருட்படுத்த மாட்டோம் என்றும் கூறி உள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக