கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி என்னும் ஊரில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ள வீரபாண்டி பிரிவிலிருந்து கிழக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதியும், ஆட்டோ வசதியும் உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
மூலசன்னதியின் மேற்கு பகுதியில் மாகாளியம்மனின் தனிச்சன்னதி விமானத்துடன் உள்ளது.
வடக்குபுற நுழைவு வாயிலின் மேற்புறத்தில் அன்னபட்சி வாகனத்தில் நாகம் குடைபிடிக்க எழிலார்ந்த கோலத்தில் அமர்ந்திருக்கும் அம்மனின் சுதைச்சிற்பம் நம்மை வரவேற்கின்றது.
அழகிய வடிவில் கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளது குறிஞ்சி மண்டபம். வைகாசி உற்சவ காலத்தில் அனைத்து தேவர்களும் இம்மண்டபத்தில் எழுந்தருள்வதாக ஐதீகம்.
கருவறை எதிரே வசந்த மண்டபத்தில் பிரம்மாண்டமான சூலம் காணப்படுகின்றது. இதை வேண்டுதல் சூலம் என அழைக்கின்றனர்.
சூலத்தை அடுத்து பலிபீடமும், சிம்ம வாகனமும் உள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாயிலில் நீலி, சூலி இருவரும் காவல் புரிய கருவறையில் அமர்ந்த கோலத்தில் புன்னகை ததும்பும் முகத்துடன், கருணை பொழியும் விழிகளுடன் சாந்த சொரூபியாய் அம்மன் அருள்புரிகின்றார்.
வேறென்ன சிறப்பு?
கோஷ்டத்தில் மகாலட்சுமி, பிரம்மஹி, துர்க்கை, சாமுண்டி மற்றும் வராஹி ஆகியோர் அருள்கின்றனர். அனைத்து கோஷ்ட தெய்வங்களும், காவல் தெய்வங்களும் ஒரே நிறத்தில் (நீலம்) புடவை அணிவித்திருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது.
மகா மண்டப நுழைவு வாயிலில் சப்த மாதர்கள் சன்னதியும், கோயிலின் வடபுறத்தில் வேப்ப மரத்தடியில் ஆதி மாரியம்மன் சன்னதியும் அமைந்துள்ளன.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
புகழ்பெற்ற இத்தலத்தில் வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. வைகாசி மாதத்தில் வரும் தேர்த்திருவிழா, நவராத்திரி மற்றும் மூன்றாவது ஆடிவெள்ளி ஆகிய விழாக்கள் முக்கிய உற்சவங்களாகும்.
21 நாட்கள் கொண்டாடப்படும் வைகாசி திருவிழாவில் அம்மன் பூச்சாட்டிற்கு பின் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மகா திருமஞ்சனம் நடைபெறும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு அடைவதற்கு, உடல்நலம் சிறக்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
வெள்ளிக்கிழமையில் மஞ்சள் குடத்துடன் வேப்பிலையை ஏந்தி கோயிலை மூன்று முறை வலம் வந்து அந்நீரால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக