கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓதிமலை என்னும் ஊரில் அருள்மிகு குமார சுப்ரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கோயம்புத்தூரிலிருந்து சுமார் 47 கி.மீ தொலைவில் உள்ள ஓதிமலை என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ மற்றும் டாக்ஸி வசதி உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தலத்தின் மூலவர் ஐந்து முகங்கள், எட்டு கரங்களுடன் நின்ற கோலத்தில் குமார சுப்ரமணியர் என்ற திருநாமத்தில் எழுந்தருளி உள்ளார்.
பொதுவாக மூலவர் பீடத்தின் மீது இருப்பது தான் வழக்கம், மாறாக இங்கு கருவறையில் உள்ள பாறை மீது எழுந்தருளி உள்ளார். இந்த அமைப்புக்கு திருகு பீடம் என்று பெயர்.
வேறென்ன சிறப்பு?
இம்முருகன் ஈசனின் சிவசொரூபம், எனவே இவருக்கு அதிகாரத் தன்மை மேலோங்கி உள்ளது. அதுமட்டுமல்லாது ருத்ராட்ச பந்தலின் கீழ் அருள்பாலிப்பது ஆற்றல் பொருந்திய அம்சமாகும்.
முருகப்பெருமான் குடிகொண்டுள்ள மலைகளில் இது மிக உயரமானதும், செங்குத்தானதும் ஆகும். இதன் உயரம் சுமார் 1000 மீட்டர்கள்.
இத்தலத்தில் வெள்ளை விநாயகர் சன்னதி உள்ளது. செம்பு தகடால் கலையம்சத்துடன் வேயப்பட்ட நெடிதுயர்ந்த கொடிக் கம்பத்தை அடுத்து மயில் மண்டபம் உள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
வளர்பிறை சஷ்டி, கிருத்திகை மற்றும் அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
சித்திரை முதல் நாள் (தமிழ் வருடப்பிறப்பு) தைப்பொங்கல், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் ஆகிய முருகனுக்கு உகந்த விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடந்தாலும் தைப்பூசமே இத்தலத்தின் தலையாய பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை ஆகியவற்றுக்கு இத்திருக்கோயிலில் பிரார்த்தனைகள் செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்தலத்தில் திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை ஆகிய வேண்டுதல்களுக்கு கிருத்திகை நாளில் முருகனுக்கு செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக