Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 ஜூன், 2022

தியேட்டர் டிக்கெட் விற்பனை, ரிசர்வேஷனை ஒழுங்கு முறைப்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை

ஆந்திராவில் திரைப்படங்களுக்கான டிக்கெட் விற்பனையை அரசு இணைதளம் மூலம் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்தது. அதற்காக 2% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் அந்த முறை இன்னும் முழுமையாக அமலுக்கு வரவில்லை.

இந்தியாவில் திரைப்பட டிக்கெட்களை Book My Show, ticket new, paytm போன்ற Nodal Agency இணைதளங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்காக அந்த நிறுவனங்கள் GSTயுடன் சேர்த்து ஒரு டிக்கெட்டிற்கு 35 ரூபாய் வசூலிக்கின்றன. இது மக்களிடம் கொள்ளையடிக்கும் செயல் என பத்திரிகையாளர் பிஸ்மி கூறுகின்றார்.

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் வெளியான திரைப்படங்கள் மூலமாக இந்த நிறுவனங்களுக்கு சுமார் 130 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இவை அனைத்தும் மக்களிடமிருந்து சுரண்டப்பட்டவை எனவும் தெரிவிக்கிறார். அத்துடன் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் தொகைகள் முழுமையாக கணக்கு காட்டப்படுவதில்லை.

உதாரணத்திற்கு ஒரு திரையரங்கில் பத்து லட்ச ரூபாய் ஒரு திரைப்படம் வசூல் செய்துள்ளது என்றால், அதற்கு வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கான கணக்கை தான் LBET (Local Body Entertainment Tax) எனப்படும் மாநில வரிக்கு கணக்கு காட்டுகின்றனர். ஆனால் தயாரிப்பாளர்களிடம் பத்து லட்சத்திற்கான வரியையும் பெற்றுக்கொள்கின்றனர். அதை முழுமையாக அரசுக்கு கட்டாமல் வெறும் பத்து சதவீதத்திற்கும் குறைவாகவே அரசுக்கு வரி செலுத்துகின்றனர் எனவும் பிஸ்மி கூறுகிறார். இதை தடுக்க தமிழக அரசு, ஆந்திர மாநில திட்டத்தை இங்கு நடைமுறை படுத்த வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றனர்.

ஒரு திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்வது கூடுதல் சுமையாக உள்ளது. ஏற்கனவே திரையரங்குகளில் விற்கப்படும் தின்பண்டங்கள், தண்ணீர் பட்டில் உள்ளிட்டவை அதிக விலையில் உள்ளன. இந்த நிலையில் இணையதள முன்பதிவில் ஒரு டிக்கெட்டிற்கு 30 முதல் 40 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். ஒரு குடும்பத்தில் அல்லது நண்பர்கள் ஐந்து பேர் சென்றால் அதற்கான தொகை சுமார் 150 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களில் இருந்து ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Nodel நிறுவங்கள் ஒரு பரிவர்த்தனையில் ஒன்றுக்கும் மேற்பட்ட டிக்கெட்கள் பதிவு செய்தாலும், ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் சேவை கட்டணம் வசூலிக்கின்றனர். அதில் மாற்றம் கொண்டு வரலாம் என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகிறார். அதுவும் 2, 3 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் போது ஒரு டிக்கெட்டிற்கான சேவை கட்டணம் மட்டும் வசூலிக்கலாம். அதே குறிப்பிட்ட டிக்கெட்டுகளுக்கு மேல் பதிவு செய்யும் பொழுது, சேவை கட்டணத்தின் தொகையை குறைக்கலாம் அல்லது சதவீத அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கலாம் எனவும் யோசனை கூறுகிறார்.

இதேபோல் தமிழகத்தில் திரையரங்குகள் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டால், அரசிற்கு வரும் வரி வருவாய் அதிகரிக்கும் எனவும் தனஞ்செயன் தெரிவிக்கிறார். அதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் கணினி மயமாக்கப்பட்டு டிக்கெட் விற்பனை ஒழுங்குமுறை படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழகத்தில் ஒரு படத்தின் உண்மையான வசூல் என்ன? அதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் என்ன? என்பது துல்லியமாக தெரியவரும். அதேசமயம் தற்போது நடிகர்கள் சம்பளம் உயர்வாக உள்ளது. இந்த முறை அமல்படுத்தப்பட்டால் அவர்களுக்கும் தங்கள் திரைப்படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது தெரியவரும். அதை வைத்து அவர்களுக்கான அடுத்த படத்திற்கு சம்பளம் நிர்ணயம் செய்ய வசதியாக இருக்கும் எனவும் தனஞ்செயன் தெரிவிக்கிறார்.

ஆந்திர மாநிலம் முன்னெடுத்துள்ள திரைப்பட டிக்கெட் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக