இதுவரை நீங்கள் மிஞ்சிய சப்பாத்திகளைக் கொண்டு சில்லி சப்பாத்தி தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் மிஞ்சிய சப்பாத்திகளைக் கொண்டு அற்புதமான சுவையில் பிட்சா செய்து சாப்பிடலாம்.
அதிலும் பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில், ஆரோக்கியமானதாக ஒருசில விருப்பமான காய்கறிகளை சேர்த்து சப்பாத்தியைக் கொண்டு பிட்சா செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது)
துருவிய சீஸ் - 1/4 கப்
சாஸ் செய்வதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 12 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 1 (பெரியது)
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
உலர்ந்த கற்பூரவள்ளி - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/8 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பௌலில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் மென்மையாக பிசைந்து, சிறிது நேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
அதற்குள் கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு, தக்காளியில் உள்ள தோல் வெளிவரும் வரை வேக வைத்து இறக்கி, தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு, பின் தக்காளி சாஸ், மிளகுத் தூள், சில்லி ப்ளேக்ஸ் மற்றும் உலர்ந்த கற்பூரவள்ளி சேர்த்து சாஸ் போன்று நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து சப்பாத்தி மாவைக் கொண்டு சப்பாத்தி செய்து கொள்ள வேண்டும். அதேப்போல் ஒரு வாணலியில் குடைமிளகாயை போட்டு, எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒவ்வொரு சப்பாத்திகளாக எடுத்து, அதன் மேல் செய்து வைத்துள்ள சாஸை தடவி, மேலே வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் சீஸ் தூவி, மீண்டும் தோசைக்கல்லில் போட்டு, 2 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைத்து இறக்க வேண்டும்.
இதேப்போல் அனைத்து சப்பாத்திகளையும் சுட்டு எடுத்தால், சப்பாத்தி பிட்சா ரெடி!!!
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக