கம்பு உண்பதால் நம் உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றன. கம்பில் களி மற்றும் கூழ் போன்ற உணவுகள் சமைத்து உண்டால் நல்ல சுவையுடன் இருக்கும். அதுமட்டுமில்லாமல் நம் உடலை குளிர்ச்சியாக வைக்க கம்பு உதவுகின்றது. சரி காரமான தக்காளி கம்பு ஊத்தாப்பம் செய்வது எப்படி என்பதை இதில் காண்போம்.
தேவையான பொருட்கள் :
கம்பு மாவு – 2 கப்.
பெரிய வெங்காயம் – 1.
தக்காளி – 2.
பச்சை மிளகாய் – 2.
சிவப்பு மற்றும் பச்சை நிற குடைமிளகாய் – 1/2 கப்.
உப்பு – தேவையான அளவு.
எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:
பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளி, பச்சை மிளகாய், சிவப்பு மற்றும் பச்சை நிற குடைமிளகாய்களை நன்கு சுத்தமாக கழுவி, பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
கம்பு மாவை சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை தேவையான அளவு எடுத்து தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். தோசைமாவு பக்குவத்தில் இருப்பது அவசியமாகும்.
மாவிற்கு தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மற்றும் குடைமிளகாய் சேர்த்து, அதில் கொஞ்சம் சுவைக்கு உப்பு சேர்க்கலாம்.
அடுத்து தோசைக்கல்லை வைத்து சூடாகிய பின்பு அதில் எண்ணெய் தடவவும். பின்பு கலக்கி வைத்துள்ள தோசை மாவை ஊற்றவும்.
இதை கொஞ்சம் தடித்த தோசையாக கெட்டியாக ஊற்ற வேண்டும். பின்பு தோசையை ‘சுற்றி எண்ணெய் விடுங்கள்.
தோசையின் மேல் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், குடை மிளகாய் கலவையைத் தூவி வேக வையுங்கள்.தேவையெனில் பொடியாக கொத்துமல்லித் தழைகளை நறுக்கியும் தூவி விடலாம், இது ஊத்தப்பத்திற்கு நல்லதொரு சுவையைத் தர வல்லது.
இது வெந்தவுடன் தோசையைத் திருப்பிப் போடவும். தோசை பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம். சுவையான, சத்தான தக்காளி கம்பு ஊத்தாப்பம் தயார்.
பரிமாறி உண்ணுங்கள். குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே கம்பை உணவாக உட்கொள்ளக் கொடுத்து வாருங்கள். அது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு நன்மையை விளைவிக்கும்.
இதை புதினா சட்னி அல்லது சாம்பாருடன் வைத்து உண்டால் அதீத சுவையுடன் இருக்கும். நீங்களும் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக