Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 11 டிசம்பர், 2017

கலிங்கம் காண்போம் - பகுதி 4

விஜயவாடாவிலிருந்து இருப்பூர்தி கிளம்பியது. சென்னையில் ஏறுகின்ற கூட்டத்தினரில் பெரும்பகுதியினர் விஜயவாடாவில் இறங்குகின்றனர். சென்னைக்கு அடுத்துள்ள ஆந்திரப் பெருநகரம் விஜயவாடாதான். நானூறு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள அந்நகர வட்டாரத்திலிருந்துதான் சென்னைக்கு ஆந்திரர்கள் வந்து போகின்றார்கள். நடைமேடையில் உண்பொருள் கூவி விற்பவர்கள் தமிழிலும் பேசத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவ்வூரின் இருப்பூர்தி நிலையமும் பெரிது. பிரிக்கப்பட்ட ஆந்திரத்தின் தலைநகரமாக விஜயவாடாவை ஆக்குவது குறித்தும் எண்ணினார்கள்.

அந்தி மயங்கி அரையிருள் கவியத் தொடங்கியது. வழியோர நெல்வயல்கள் இருளில் அடர்பச்சையாகத் தெரிந்தன. அடுத்து வரவுள்ள பெருநகரம் இராஜமுந்திரி. தஞ்சாவூர் டான்சூர் ஆனதுபோல ஆங்கிலேயர்களால் 'இராஜமன்றி' எனப்பட்ட இந்நகரத்தின் பெயர் 'இராஜமகேந்திராவரம்.' காவிரியின் மீதமர்ந்த தஞ்சை எப்படித் தமிழ்ப் பண்பாட்டுத் தலைநகரமோ அவ்வாறே கோதாவரியின் மீதமர்ந்த இராஜமகேந்திராவரம் தெலுங்குப் பண்பாட்டுத் தலைநகரம். சுற்றிலும் நெல்வயல்கள் செழித்துக் கொழித்திருக்கின்ற அவ்வூரில் வளமைக்குப் பஞ்சமில்லை.

கோதாவரியைப்போல் காவிரியும் வற்றா நீர்ப்பெருக்குடையவளாய் இருந்திருப்பின் நம் தஞ்சையும் அப்படியொரு விரிநகரமாக வளர்ந்திருக்கும். வைகையில் கோதாவரியின் நீர்ப்பெருக்கு நிறைந்திருக்குமானால் இன்று மதுரை மாநகரம் உலகத் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக வளர்ந்திருக்கும். எண்ணிப் பாருங்கள், வெறும் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய அமெரிக்க நகரங்கள் எப்படி விண்முட்ட வளர்ந்தன ? தமிழர் வரலாறு என்பது எப்போது தோன்றியதோ, அதற்கும் முன்பான காலகட்டத்திலிருந்து ஒரு நகரம் தோன்றி வளர்ந்து செழித்தவாறே இருந்தது என்றால் அது மதுரைதான். நாகரிக மனித்த இனத்தின் வரலாற்றைக் 'கிறித்து பிறப்பதற்கு முன்' எப்போது தொடங்கினாலும் அப்போது ஒரு நகரத்தின் வரலாற்றையும் சேர்த்து எழுத வேண்டியிருக்கும். அந்நகரம்தான் மதுரை. வைகை ஆற்றின் நீர்வளம் வற்றத் தொடங்கியது முதல் மதுரையின் நவீன வளர்ச்சி பின்தங்கியது என்றே சொல்ல வேண்டும்.

முன்பொருமுறை சிவகாசி செல்கையில் நால்வழிச்சாலையானது வைகையைக் கடக்கும் பாலத்தில் வண்டியை நிறுத்தி இறங்கினேன். வைகை ஆற்றுப் படுகை அகலமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதில் நீர் பாய்ந்ததற்கான சுவடே இல்லை. படுகையெங்கும் சீமைக்கருவேல முள்மரங்கள் களையாய் அடர்ந்திருந்தன. சீமைக்கருவேல்கள் கரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பது வேறு. ஆனால், கரை தொடங்கி ஆற்றுப்படுகையை மறைத்து மூடுமாறு ஊக்கமாய் வளர்ந்திருந்தன. ஆற்று நீர்ப்படுகையில் இவ்வளவு இழிமரங்கள் முளைத்துச் செழிக்கும்வரை மூடிக்கொண்டு வாழ்கின்ற மக்கு மக்கள் நாமாகத்தான் இருப்போம்.

கோதாவரி ஆற்றுப் பெருக்கையும் அதன் கரையொழுங்கையும் நீங்கள் காண வேண்டும் அதற்கு ஏதுவாக முந்திய கோதாவரிப் பயணத்தின்போது எடுத்த அவ்வாற்றின் படங்கள் சிலவற்றையும் இணைத்திருக்கிறேன். ஓர் ஆற்றின் கரையை ஆண்டுதோறும் சீராக்க வேண்டும். பன்னூற்றாண்டுகள் வளரும் அருமரங்களைக் கரைமருங்கில் நட்டு வளர்க்க வேண்டும். வெள்ளம் வடிந்த போதெல்லாம் அதன் படுகையைக் காக்கவேண்டும். இவற்றில் எதையுமே செய்யாமல் ஆற்றில் நீரில்லை என்று புலம்புவதால் என்ன பயன் ?

இராஜமகேந்திராவரத்திற்குத் தனிச்சிறப்பு ஒன்றுண்டு. எல்லாவகைப் போக்குவரத்து வசதிகளும் உள்ள நாட்டின் சில நகரங்களில் அதுவும் ஒன்று. தரைவழி, இருப்புப் பாதைவழி, வான்வழி, நீர்வழி என்று எல்லாவகைப் போக்குவரத்து வசதிகளும் உள்ளன. வானூர்தி நிலையம் இருக்கிறது. கோதாவரியில் படகுப் போக்குவரத்து நடக்கிறது. சென்னையில் என்னதான் பறக்கும் இருப்பூர்திகள் இருந்தாலும் இரண்டு ஆறுகளையும் காக்க முடியவில்லையே. ஒருவேளை, தமிழகத்தின் ஆறுகளில் நீர்ப்பெருக்கைக் காத்திருப்போம் எனில், தஞ்சையும் திருச்சிராப்பள்ளியும் மதுரையும் இயற்கையழகு கெடாத பெருநகரங்களாக விரிந்திருக்கும்.

இராஜமகேந்திராவரத்தில் கோதாவரியை இருப்பூர்தி கடக்கும் அருமணித்துளிகளை உணர்ந்து சிலிர்க்கத் தவறவே கூடாது. எல்லா ஆற்றுப் பாலங்களிலும் இருப்பூர்தியின் தலைப்பகுதியோ வால்பகுதியோ கரையை அடைந்திருக்கும். அதன் ஒரு பகுதிதான் பாலத்தைக் கடக்கும். கோதாவரியைக் கடக்கும் பாலத்திற்கு நீளம் மூன்று கிலோ மீட்டர்கள். நமக்குக் கீழே ஆயிரத்தைந்நூறு கிலோமீட்டர்கள் தொலைவுக்கு நீர் சேகரித்துப் பெருகிய நதியொன்று கடல்போல் விரிந்து நிற்கும். அதன்மீது அதிராத நகர்வில் இருப்பூர்தி நகரும். ஒரு பாலத்திலிருந்து மறு பாலத்தின் போக்குவரத்தைக் காணலாம். அந்தப் பாலத்தில் நகரும் வண்டிகள் எறும்புகளைப்போல் தெரியும். சாலைப் போக்குவரத்து நிகழும் பாலத்தில் வண்ண விளக்குகளால் ஒப்பனை செய்திருக்கிறார்கள். அவை நொடிக்கொரு நிறங்களில் மாறிக்கொண்டே இருக்கின்றன. அவற்றைப் படம்பிடித்தேன். கண்கொள்ளாக் காட்சி அது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக