Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 11 டிசம்பர், 2017

கலிங்கம் காண்போம் - பகுதி 5: ஓர் இனிய பயணத்தொடர்

இராஜமகேந்திரகிரியிலேயே இருட்டிவிட்டது. அதனால் வழியோரத்து வெளிப்புறக் காட்சிகளில் மனஞ்செலுத்த முடியவில்லை. அடுத்து வரவுள்ள பேரூர் விசாகப்பட்டினம். இப்போது இருப்பூர்தியின் நெரிசல் தளர்ந்துவிட்டது. உட்கார இடமின்றி நிற்பவர்களும் இருந்தார்கள் என்றாலும் சென்னையில் ஏறியதைப்போன்ற கசக்கம் இல்லை.
வண்டி வடகிழக்காகச் செல்கிறது. அது கடக்கும் ஒவ்வொரு சிறுதொலைவும் குளிர் மிகுந்த பகுதியை நோக்கி நகர்வதாகும். அதனால் சில்லென்று காற்று வீசியது. கடலோரத்திலேயே செல்வதால் கடற்காற்றின் இதமும் சேர்ந்திருந்தது. உட்கார்ந்த சோர்வில் கண்சொக்கிய வேளையில் விசாகப்பட்டினத்திற்குள் செல்வது தெரிந்தது.
ஊரை அண்டுகிறோம் என்பதை வழியோரத்தில் எதிர்ப்படும் சிறு சிறு குன்றுத் தொடர்கள் அறிவிக்கின்றன. ஒரு மலையடிவாரத்தில் அல்லது ஒரு குன்றின் அடிவாரத்தில் நமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும் என்பது என் கற்பனை. விசாகப்பட்டினத்தில் உள்ள எல்லா வீடுகளுமே ஏதோ ஒரு குன்றின் அடிவாரத்தில்தான் இருக்கின்றன. நம் கற்பனைக்குப் பொருத்தமான ஊராக இருக்கும்போல் உள்ளதே என்று நினைத்துக்கொண்டேன். வழியோரத்தில் சிற்றாலைகளும் இருந்தன. தொலைவில் காணப்பட்ட சாலைகளில் அளவான போக்குவரத்து காணப்பட்டது.
விசாகப்பட்டினம் இருப்பூர்திச் சேர்முகத்தில் (Junction) வண்டி நின்றது. ஏறத்தாழ பதின்மூன்று மணிநேர இருக்கைப் பயணம் ஒருவாறு முடிவுக்கு வந்தது. கலிங்கத்திற்குச் செல்வதாகக் கூறுவிட்டு விசாகப்பட்டினத்தில் ஏன் இறங்குகிறீர்கள் என்று கேட்கலாம். வரலாற்றின்படி விசாகமும் கலிங்கர்களால் ஆளப்பட்டதுதான். இப்போது நாம் கலிங்கத்திற்கு வந்துவிட்டோம் என்றே வைத்துக்கொள்ளலாம்.
விசாகப்பட்டினத்திலிருந்து தொண்ணூற்றிரண்டு கிலோமீட்டர்கள் தொலைவில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் போர்ராக் குகைகள் அமைந்திருக்கின்றன. ஏற்காட்டு மலைகளைப் போன்ற அளவான உயரத்தில் உள்ள அரக்குப் பள்ளத்தாக்கு என்னுமிடத்திற்குச் செல்லும் வழியில் அக்குகைகள் உள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய குகைகளில் ஒன்றான போர்ராக் குகைகளைப் பார்க்கும் வாய்ப்பு ஒருவருடைய வாழ்வில் அரிதினும் அரிதாகத்தான் வரும். அக்குகைகளைப் பார்ப்பதற்காகத்தான் விசாகப்பட்டினத்தில் இறங்குவது.
ஆந்திரத்தின் இரண்டாவது பெரிய நகரம் என்று விசாகப்பட்டினத்தைக் கூறுகிறார்கள். முதலாம் பெருநகரான ஐதராபாத் தற்போது தெலுங்கானத்திற்குச் சென்றுவிட்டபடியால் இப்பொது ஆந்திரத்தின் முதற்பெரு நகரமாக விசாகப்பட்டினம் ஆகியிருக்கும். நான் இருக்குமிடத்திலிருந்து வடகிழக்காக நெடுந்தொலைவு வந்துவிட்டேன். சென்னையிருந்து விசாகப்பட்டினம் ஏறத்தாழ எண்ணூறு கிலோமீட்டர்கள். கடற்கரையும் சிறுமலைக் குன்றுகளும் கலந்த நிலப்பகுதி. அந்நகரில் நிரந்தர அமைதி குடிகொண்டிருப்பதைப்போல் எனக்கு ஒரு மனப்பதிவு ஏற்பட்டிருக்கிறது.
வரலாற்றில் விசாகப்பட்டினம் கலிங்கப் பேரரசர்களால் கைப்பற்றப்பட்டப்போது கலிங்கப் பகுதிகளோடு சேர்ந்திருந்தது. பிறகு பல்லவர்களின் ஆளுகையின்கீழ் வந்தது. பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் சோழப் பேரரசன் முதலாம் குலோத்துங்கன் அந்நகரைத் தன்குடைக்கீழ்க் கொணர்ந்தான். அப்போது அந்நகர் 'குலோத்துங்கப்பட்டினம்' என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஆக, நம் தமிழ்மன்னனின் முற்காலத்து நகரமொன்றிற்குத்தான் வந்திருக்கிறோம். பிறகு விஜயநகரத்து அரசாட்சியின்கீழ் வந்தது. அதன்பிறகு மொகலாயர்கள் கைப்பற்றினர். மொகலாயர்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்களும் பிரஞ்சுக்காரர்களும் ஆண்டனர். தற்போது கிழக்குக் கடற்கரையில் கடற்படைத் தலைமையகம். நாட்டின் பதினான்காவது பெரிய நகரம். இயற்கைத் துறைமுகம்.
இருப்பூர்திச் சேர்முகத்தில் (Junction) இறங்கியதுமே அந்தச் சூழல் எனக்குப் பிடித்துப்போய்விட்டது. வண்ண வண்ண விளக்குகளால் அறிவிப்புப் பலகைகளும் நடைமேடைத் தரையும் மின்னின. அமர்வதற்கு இடப்பட்டிருந்த இருக்கைகள் வெள்ளிப்பூச்சு மிக்க கம்பிக் குழல்களால் இடப்பட்டிருந்தன. குப்பையில்லாமல் பளிச்சென்று இருந்தது. சென்னை நடுவண் இருப்பூர்தி நிலையத்தைப்போல் வியர்த்துக் கொட்டவில்லை. நகரமெங்கும் குளிர்ப்பாங்கு செய்யப்பட்டதுபோல் இருந்ததால் அந்தக் குளிரானது இருப்பூர்திச் சேர்முகத்திலும் சிலுசிலுத்தது. விசாகப்பட்டினத்தைப்போல் தூய்மையான இருப்பூர்தியகத்தை நான் எங்கும் பார்த்ததில்லை. விமான நிலையத்தைப்போன்று துலக்கமாக இருந்தது. அறிவிப்புகள் இதமான குரலில் உறுத்தாமல் ஒளிபரப்பப்பட்டன. மொய்க்கும் கூட்டம் இல்லாமல் அளவான மக்கள் அங்கங்கே நடமாடினர். நாட்டின் தூய்மையான இருப்பூர்தியகங்களில் விசாகப்பட்டினம்தான் முதன்மையான இடத்தில் இருக்கிறது. அதற்கடுத்த இடங்களில் செகந்தராபாத், ஜம்முதாவி ஆகியன இருக்கின்றன.
விசாகப்பட்டினத்தில் இறங்கியவுடனேயே அதன் தூய்மையில் மயங்கி 'நாட்டின் தூய்மையான இருப்பூர்தி நிலையங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்' என்று முகநூலில் படம்பிடித்துப் போட்டேன். அந்தக் கருத்து உண்மையென்று பிறகு கூகுளில் தேடிக்கண்டேன். நாம் உணர்வது முற்றிலும் உண்மையாக இருக்கிறது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
நள்ளிரவாகிவிட்டபடியால் இனி நகர்க்குள் விடுதியறை தேடி அலைவது நன்முடிவில்லை. விடிகாலையில் அரக்குப் பள்ளத்தாக்குக்குப் பேருந்தினைப் பிடிக்க வேண்டும். இடையில் நான்கு மணி நேரத்தைக் கடத்தினால் போதும். பயணிகளுக்கான கட்டில் அடுக்கறையில் (Dormitory) இடமில்லை என்று நுழைதாள் கூண்டாள் தெரிவித்தார். பயணியர் காத்திருப்பு அறையில் வந்து படுக்கையை விரித்தாயிற்று. தூய்மையான தரை, மொழுமொழுப்பான இருக்கை, மின்விசிறிகள். முதுகுப்பையைத் தலைக்கு வைத்துப் படுத்ததும் தூக்கம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக